திருப்பூரில் அதிகாலை பரபரப்பு சம்பவம்: இந்து முன்னணி நிர்வாகியின் கார் தீ வைத்து எரிப்பு - மர்ம ஆசாமிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல்

திருப்பூரில் அதிகாலையில் இந்து முன்னணி நிர்வாகியின் கார் தீவைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

Update: 2020-02-13 00:06 GMT
திருப்பூர்,

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மோகன சுந்தரம் (வயது 50). சொந்தமாக பனியன் நிறுவனம் வைத்துள்ளார். மேலும் இந்து முன்னணி கோட்ட செயலாளராக இருந்து வருகிறார். இவர் தனது காரை வீட்டு முன்பு சாலையோரம் நிறுத்துவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மோகன சுந்தரம் தனது காரை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்கச் சென்றார். இதற்கிடையே நேற்று அதிகாலை 3.30 மணியளவில் அவரது கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்து, மோகன சுந்தரத்திற்கும், திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலுமாக எரிந்து எலும்புக்கூடானது. இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் மற்றும் துணை போலீஸ் கமிஷனர் (சட்டம்- ஒழுங்கு) பத்ரி நாராயணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை செய்தனர்.

இந்த சம்பவம் பற்றி தெரியவந்ததும் காருக்கு தீவைத்த மர்ம ஆசாமிகளை கைது செய்யக்கோரி காலை 6.30 மணிக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மற்றும் பா.ஜனதா கட்சியினர் கொங்கு மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காருக்கு தீவைத்தவர்கள் உடனே கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதியளித்தனர். இதனைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மோகன சுந்தரத்தின் கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததா? அல்லது மர்ம ஆசாமிகள் தீவைத்தார்களா? என்பதை தெரிந்து கொள்ள அவருடைய வீட்டு முன்பு பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதிகாலை 3.20 மணிக்கு 2 ஸ்கூட்டரில் 4 மர்ம ஆசாமிகள் வருவதும், அதில் ஸ்கூட்டரை ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிந்து இருப்பதும், பின்னால் அமர்ந்திருப்பவர்கள் முகத்தை துணியால் மறைத்து இருப்பதும் பதிவாகி இருந்தது.. மேலும் அந்த ஆசாமிகள் அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருக்கிறதா? என அங்கும் இங்குமாக பார்ப்பதும், பின்னர் அவர்களில் ஒரு ஆசாமி மட்டும் கார் அருகே வந்து காருக்கு தீவைக்கும் காட்சியும் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த சம்பவம் நடந்ததா? பணப்பிரச்சினை தொடர்பாக இந்த சம்பவம் நடந்ததா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில், இதில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரியும், இந்து முன்னணி சார்பில் இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு மாநகராட்சி அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்