சாத்தூர் அருகே, போலீசாரை கண்டித்து கடைஅடைப்பு-மறியல்

ஏழாயிரம்பண்ணையில் போலீசாரை கண்டித்து கடை அடைப்பு, சாலை மறியல் நடந்தது.

Update: 2020-02-12 22:15 GMT
தாயில்பட்டி,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையில் கடந்த 7-ந் தேதி ஏழாயிரம்பண்ணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற சிவசங்குபட்டியை சேர்ந்த சிவானந்தம் (வயது28) என்பவர் வாகனத்தை போலீசார் நிறுத்தி உள்ளனர். அப்போது சிவானந்தம் நிறுத்தாமல் சென்றதால் வாகனத்தை விரட்டி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் போலீசார் அவரை தாக்கியதை கண்டித்தும் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தியும் ஏழாயிரம்பண்ணை வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவசங்குபட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த போராட்டத்தால் ஏழாயிரம்பண்ணை பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ராஜவர்மன் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவரை வாலிபர்கள் சிலர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.

பின்னர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் ஏழாயிரம்பண்ணை பகுதியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்