கருவடிக்குப்பத்தில் ரூ.18½ கோடியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு

கருவடிக்குப்பத்தில் ரூ.18½ கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு விழா நடந்தது.

Update: 2020-02-13 00:15 GMT
புதுச்சேரி,

கருவடிக்குப்பம் சுற்றுவட்டார பகுதிக்கு அசோக் நகர் மேல்நிலை குடிநீர் தொட்டி மற்றும் ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை பொதுசுகாதார கோட்டம் சார்பில் கருவடிக்குப்பத்தில் ரூ.18 கோடியே 53 லட்சம் மதிப்பில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டடுக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டியும், 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்தேக்க தொட்டி, நீர் உந்து குழாய், நீர்பங்கீட்டு குழாய், வீட்டிற்கான இணைப்புகள், இடையன்சாவடி சாலையிலிருந்து நீர்தேக்க தொட்டிக்கான இணைப்பு சாலை அமைக்கப்பட்டது.

மேலும் புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து ஒவ்வொரு வீட்டிற்கும் புதிய பங்கீட்டு குழாய்களில் இருந்து புதிய இணைப்புகள் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் கருவடிக்குப்பம், மேஜர் சரவணன் நகர், வாஞ்சிநாதன் நகர், விஷ்ணுநகர், இந்திரா நகர், ஓம் சக்தி நகர், சண்முகா நகர், நாராயணசாமி நகர், சப்தகிரி நகர், சாமிபிள்ளை தோட்டம், பகத்சிங் நகர், கருணாஜோதி நகர், பாரதி நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்பெற உள்ளனர்.

இப்புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம் ஷாஜகான் ஆகியோர் கலந்துகொண்டு மேல்நிலை நீர்தேக்க தொட்டி, மற்றும் குடிநீர் குழாய் இணைப்பை திறந்து வைத்தனர்.

இதில் பொதுப்பணித்துறை செயலர் சுர்பீர்சிங், தலைமை பொறியாளர் மகாலிங்கம், கண்காணிப்பு பொறியாளர் சேகரன், செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாாளர் பாலசுப்பிரமணியன் உட்பட காலாப்பட்டு வட்டார காங்கிரஸ் துணைத்தலைவர் தினகரன், வடக்கு மாவட்ட தலைவர் முத்துராமன், காங்கிரஸ் நிர்வாகிகள் மணிமொழி, ரவி, நாராயணசாமி, முருகானந்தம், கோவிந்தசாமி, பத்மநாபன், சுகுமாறன், ரவிச்சந்திரன், மதி, குமார், அழகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்