அலுவலகங்களில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி ஊழியர்கள் இறந்தால் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை துப்புரவு பணியாளர்களின் மறுவாழ்வு தேசிய ஆணைய உறுப்பினர் தகவல்

தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும்போது ஊழியர்கள் யாராவது விஷவாயு தாக்கி இறந்தால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என துப்புரவு பணியாளர்களின் மறுவாழ்வு தேசிய ஆணைய உறுப்பினர் தெரிவித்தார்.

Update: 2020-02-13 22:15 GMT
பூந்தமல்லி, 

தூய்மை பணியில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நலத்திட்டம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் திருவேற்காட்டில் நடைபெற்றது. கூட்டத்துக்கு துப்புரவு பணியாளர்களின் மறுவாழ்வு தேசிய ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹர்மேனி தலைமை தாங்கினார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி மாநகராட்சி, 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள், 526 ஊராட்சிகளில் தூய்மை பணியில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக செய்து கொடுக்கப்பட்டு உள்ளதா?. அவர்களுக்கு போதுமான அளவு மருத்துவ வசதிகள், மருத்துவ காப்பீடுகள் மற்றும் பணியில் ஈடுபடுவதற்கு தேவையான கையுறைகள், காலுறைகள், முகமூடிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளனவா?. முறையான ஊதியம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா? என்பது தொடர்பாக ஜெகதீஷ் ஹர்மேனி கேட்டறிந்தார். அப்போது அவரிடம் துப்புரவு பணியாளர்கள் தங்கள் குறைகளை எடுத்து கூறினர்.

பின்னர் ஜெகதீஷ் ஹர்மேனி பேசியதாவது:-

அதிகாரிகள் மீது நடவடிக்கை

தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும்போது ஊழியர்கள் யாராவது விஷவாயு தாக்கி இறந்துபோனால் நகராட்சியோ, பேரூராட்சியோ அல்லது ஊராட்சியானால் அங்கு பணிபுரியும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இனி ஒரு இறப்பு ஏதும் நடக்காமல் பார்த்து கொள்ளவேண்டும்.

துப்புரவு தொழிலாளர்கள் அரசின் உரிய அனுமதி இல்லாமலும், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலும் பணிகளில் ஈடுபடுத்தும் தனியார் நிறுவனங்கள் மீது போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் வித்யா, பூந்தமல்லி உதவி போலீஸ் கமிஷனர் செம்பேடு பாபு மற்றும் அனைத்து நகராட்சி கமிஷனர்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி பாலா என்பவர் பலியான இடத்தை ஜெகதீஷ் ஹர்மேனி பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்