பல்லாரியில் கார் மோதி இருவர் பலியான விபத்துக்கு எனது மகன் காரணமா? மந்திரி ஆர்.அசோக் பதில்

பல்லாரியில் கார் மோதி இருவர் பலியான விபத்துக்கு எனது மகன் காரணமா? என்பது குறித்து மந்திரி ஆர்.அசோக் பதிலளித்துள்ளார்.

Update: 2020-02-13 22:00 GMT
பெங்களூரு,

பல்லாரியில் கடந்த 10-ந் தேதி சொகுசு கார் ஒன்று ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் மரணம் அடைந்தனர். அந்த காரில் மாநில வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக்கின் மகன் இருந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பல்லாரியில் இருவர் பலியான கார் விபத்தில் எனது மகன் பெயர் அடிபடுகிறது. இது பொய். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காரில் இருந்தவர்கள் காயம் அடைந்து உள்ளனர். இந்த விபத்தால் நான் வருத்தம் அடைந்துள்ளேன். நான் எனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி விசாரணையை மாற்றுவதாக தகவல் வெளிவருகிறது. மந்திரி பதவியும், சட்டமும் வெவ்வேறு. விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தக்க தண்டனை

அதனால் இதுபற்றி நான் ஒரு மந்திரியாக அதிகமாக பேசக்கூடாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்கும். இந்த விஷயத்தில் நான் அரசியல் செய்ய மாட்டேன். விசாரணை நடந்து உண்மை வெளியே வரட்டும். சட்டத்தின் முன்பு அனைவரும் சமமானவர் களே. விபத்து ஏற்படுத்திய கார் பதிவாகியுள்ள நிறுவனத்திற்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இவ்வாறு மந்திரி ஆர்.அசோக் கூறினார்.

மேலும் செய்திகள்