குளிர்சாதன வசதியுடன் நகர பஸ்கள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

கரூரில் குளிர்சாதன வசதியுடன் கூடிய நகர பஸ்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

Update: 2020-02-13 22:45 GMT
கரூர்,

கரூர் பஸ் நிலையத்தில் இருந்து 6 புறநகர்பஸ்களையும், குளிர்சாதன வசதியுடன் கூடிய 2 புதிய நகர பஸ்களையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இதில் கரூர் முதல் கொடைக்கானல் வரை, ஈரோடு முதல் கும்பகோணம் வரை, திருச்சி முதல் ஈரோடு வரை, பள்ளப்பட்டி முதல் ஏற்காடு வரை, கரூர் முதல் பொள்ளாச்சி வரை இரண்டு பஸ்கள் என மொத்தம் 6 புறநகர்பஸ்களையும், கரூர் முதல் குளித்தலை வரை மற்றும் கரூர் முதல் வேலூர் வரை என இரண்டு குளிரூட்டப்பட்ட நகரபஸ்களும் பயன்பாட்டிற்கு விடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும். பின்னர் பஸ்சினுள் சென்று பார்வையிட்ட அமைச்சர் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து போக்குவரத்துத்துறையில் தொழில்நுட்ப உதவியாளராக இருந்து போர்மேனாக பதவி உயர்வு பெற்ற 4 பேருக்கும், ஓட்டுனராக இருந்து பதவி உயர்வு பெற்ற 4 பேருக்கும், சேம ஓட்டுனராக இருந்து தினக்கூலி ஓட்டுனராகப் பதவி உயர்வு பெற்ற 4 பேருக்கும், சேம நடத்துனராக இருந்து தினக்கூலி நடத்துனராக பதவிஉயர்வு பெற்ற 5 பேருக்கும் என மொத்தம் 17 பேருக்கு பதவி உயர்வுகளுக்கான ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.

இதில், மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், கீதா எம்.எல்.ஏ., திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் மண்டல மேலாண்மை இயக்குனர் ஆர்.பொன்முடி, மாவட்ட ஊராட்சித்தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன், துணைத்தலைவர் தானே‌‌ஷ் என்கிற முத்துக்குமார், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்