ஒரே இணையதள பதிவு மூலம் அனைத்து லாரிகளுக்கும் பாகுபாடின்றி மணல் வழங்க வேண்டும் சம்மேளன தலைவர் பேட்டி

ஒரே இணையதள பதிவு மூலம் அனைத்து லாரிகளுக்கும் பாகுபாடின்றி மணல் வழங்க வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி கூறினார்.

Update: 2020-02-13 22:27 GMT
நாமக்கல்,

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் செல்ல.ராசாமணி தலைமையில் சங்க நிர்வாகிகள் மற்றும் லாரி அதிபர்கள் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்ஸ்லி ராஜ்குமாரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

பின்னர் செல்ல.ராசாமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- தமிழகம் முழுவதும் தற்போது 5 அரசு மணல் விற்பனை நிலையங்கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு 600 முதல் 700 லோடுகள் மணல் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. எனவே லாரி உரிமையாளர்கள் மணல் லோடு எடுக்க இணையதளத்தில் பதிவு செய்து விட்டு, ஒரு லோடு மணலுக்கு 3 மாதங்களுக்கு மேல் காத்திருந்து வருகிறோம்.

ஆனால் நாமக்கல் மாவட்டம் ஆரியூர், வேலூர் மாவட்டம் வடுகந்தாங்கல் ஆகிய இரு அரசு மணல் விற்பனை நிலையங்களில் மணல் எடுக்க வேண்டி, இணையதள பதிவு மூலம் பதிவு செய்த மணல் லாரி சங்க லாரிகளுக்கு வரிசைப்படி மணல் வழங்காமல், அரசு ஒப்பந்த வேலைகளுக்கு என்று தினசரி முன்னுரிமை அடிப்படையில் முறைகேடாக நூற்றுக்கணக்கான லாரிகளுக்கு மணல் வழங்கி வருகிறார்கள். இவ்வாறு அரசு ஒப்பந்த வேலைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மணல் எடுத்து செல்லும் லாரிகள் குறைந்த எண்ணிக்கையிலான லோடுகளை அரசு ஒப்பந்த வேலைகளுக்கு கொடுத்து விட்டு, பெரும்பாலான லோடுகளை வெளியில் அதிக விலைக்கு ஒரு லோடு ரூ.50 ஆயிரம் வரை விற்று அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி கொள்ளை அடித்து வருகிறார்கள்.

அரசு மணல் விற்பனை நிலையங்களில் மணல் லாரி சங்கத்தினருக்கு இணையதள பதிவு வாரத்தில் ஒருநாள் மட்டும் அதாவது வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு 5 நிமிடம் மட்டுமே பதிவு செய்கிறார்கள். ஆனால் அரசு ஒப்பந்த வேலைகளுக்கு என்று அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் இணையதள பதிவு செய்வதால், பொது பயன்பாட்டிற்கு சங்க லாரி உரிமையாளர்கள் மணல் எடுக்க முடியாமல் வேலைவாய்ப்பு இன்றி சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

அரசு ஒப்பந்த வேலைகளில் அரசு கட்டுமான பணிகளுக்கு வகுத்துள்ள விதிமுறைகளில் பெரும்பாலும் கட்டுமான பணிகள் அனைத்தும் எம்.சாண்டால் கட்டப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. பொதுவாக உதவி பொறியாளர்கள் மட்டுமே அரசு பணிக்கு மணல் வேண்டி இணையதளத்தில் பதிவு செய்வார்கள். ஆனால் ஒப்பந்ததாரர்களே தங்களுக்கு வேண்டிய லாரிகளின் பதிவு எண்ணை பதிவு செய்து முறைகேடாக மணல் எடுத்து செல்கிறார்கள்.

எனவே விதிமுறைகளுக்கு மாறாக அரசு மணல் விற்பனை நிலையங்களில் அரசு ஒப்பந்த வேலைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் மணல் வழங்கி வருவதை தடை செய்து, அனைத்து லாரிகளுக்கும் ஒரே இணையதள பதிவு மூலம் பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்தி, அனைத்து லாரிகளுக்கும் பாகுபாடின்றி மணல் வழங்க வேண்டும். லாரி உரிமையாளர்களின் சிரமத்தை போக்கிடும் வகையில் அனைத்து நாட்களும் இணையதள பதிவு செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்த கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளோம். எங்கள் மனு மீது நடவடிக்கை இல்லை என்றால் முறைகேடு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடருவோம். மேலும் அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்து பேசி எத்தகைய போராட்டத்தை நடத்துவது என்பதை முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்