மின்சார வாரியத்தில் ‘கேங்மேன்' பணிக்கான எழுத்துத்தேர்வுக்கு தடையில்லை அமைச்சர் தங்கமணி பேட்டி

மின்சார வாரியத்தில் ‘கேங்மேன்' பணிக்கான எழுத்துத்தேர்வு நடத்துவதற்கு எந்த தடையாணையும் இல்லை என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

Update: 2020-02-13 22:33 GMT
நாமககல்,

நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் மதுபானங்கள் மற்றும் சாராயத்தின் தீமைகள் குறித்த ஊர்வலம் பரமத்திவேலூரில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். திருச்செங்கோடு தாசில்தார் மணிராஜ் முன்னிலை வகித்தார். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பின்னர் கந்தசாமி கண்டர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 18 பள்ளிகளை சேர்ந்த 1,277 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் வழங்கினார்.

இதேபோல பள்ளிபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட அமைச்சர் தங்கமணி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து பரமத்திவேலூர், பள்ளிபாளையத்தில் நிருபர்களை சந்தித்த அமைச்சர் பேட்டி அளித்தபோது கூறியதாவது:- டெல்டா மாவட்ட விவசாய பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார். இதனை பொறுத்து கொள்ள முடியாமல் ஒரு சில காரணங்களுக்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார். ஆனால் முதல்-அமைச்சர் அறிவித்த முடிவில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார். இந்த அறிவிப்பு உறுதியாக செயல்படுத்தப்படும்.

மின்சார வாரியத்தில் 'கேங்மேன்' பணியிடத்தை நிரப்புவதற்காக 15 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான எழுத்துத்தேர்வு விரைவில் நடைபெறும். ஆனால் ஒரு சிலர் ஐகோர்ட்டிற்கு சென்று 'கேங்மேன்' பணியிடங்களை நிரப்புவதற்கு தடையாணை பெற்று இருப்பதை போல தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். கேங்மேன் பணிக்கான எழுத்துத்தேர்வு நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை. ஒளிவுமறைவின்றி எழுத்துத்தேர்வு நடத்தப்படும். ஏற்கனவே உடல்தகுதி தேர்வில் கலந்துகொண்ட 90 ஆயிரம் பேருக்கும் தனித்தனியாக வீடியோ ஆதாரத்தை மின்வாரியம் எடுத்து வைத்துள்ளது.

பிற மாநில மின்வாரிய துறையினர் கூட, தமிழக மின்வாரியத்தை பார்த்து இதேபோன்று தேர்வு செய்யும் முறையை பின்பற்றி வருகின்றனர். இந்தநிலையில் கேங்மேன் பணியிடத்திற்கான உடல்தகுதி தேர்வில் சில தொழிற்சங்கத்தினரின் தூண்டுதலின்பேரில் கலந்து கொள்ளாமல்போன ஒரு சிலர் தற்போது இதனை நிறுத்துவதற்காக கோர்ட்டிற்கு சென்றுள்ளனர். எனவே எந்தவித விசாரணையையும் சந்திக்க மின்வாரியம் தயாராக உள்ளது.

இதேபோல ஏற்கனவே நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறியாளர் பணியிடங்களுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் பணி வழங்கப்பட்டுள்ளது. இதிலும் மின்சார வாரியம் ஒளிவு மறைவின்றி செயல்படுகிறது. வேண்டுமென்றே ஒரு சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் முறைகேடுகள் நடந்ததை கண்டறிந்து அதில் ஈடுபட்டவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

டாஸ்மாக் ஊழியர்கள் தினமும் வசூலாகும் பணத்தை பாதுகாப்பாக வைப்பதற்கு டாஸ்மாக் கடைகளில் லாக்கர் வசதி ஏற்படுத்தி தரப்படும். இதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. கோடை காலத்தில் 17 ஆயிரத்து 500 மெகாவாட் அளவிற்கு மின்தேவை ஏற்பட்டாலும் அதனை வழங்க மின்சார வாரியம் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்