மராட்டிய பா.ஜனதா தலைவராக சந்திரகாந்த் பாட்டீல் மீண்டும் நியமனம் மும்பை தலைவராக மங்கள் பிரபாத் லோதா தொடர்கிறார்

மராட்டிய பாரதீய ஜனதா தலைவராக சந்திரகாந்த் பாட்டீல் மீண்டும் நியமனம் செய்யப்பட்டார். மும்பை தலைவர் பதவியில் மங்கள் பிரபாத் லோதா மீண்டும் அமர்த்தப்பட்டார்.

Update: 2020-02-13 22:43 GMT
மும்பை, 

மராட்டியத்தில் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா அதிக இடங்களை கைப்பற்றியபோதும், ஆட்சியமைக்க போதிய இடங்களை பெற முடியவில்லை. இந்தநிலையில் சிவசேனா கட்சி தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து புதிய கூட்டணி அரசை அமைத்து பாரதீய ஜனதாவுக்கு அதிர்ச்சி அளித்தது.

இதனால் பாரதீய ஜனதா எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளப்பட்டது. இதன் காரணமாக பாரதீய ஜனதா தலைவர் பதவியில் இருந்து சந்திரகாந்த் பாட்டீல் நீக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகின.

புதிய தலைவர்

நவிமும்பை நெருலில் மாநில பாரதீய ஜனதா நிர்வாகிகள் கூட்டம் வருகிற 16-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது.

இந்த கூட்டத்தில் மராட்டிய பாரதீய ஜனதா கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தநிலையில் பாரதீய ஜனதா தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அறிக்கையில், சந்திரகாந்த் பாட்டீல் மீண்டும் மராட்டிய பாரதீய ஜனதா தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பாரதீய ஜனதா மும்பை பிரிவு தலைவராக உள்ள மங்கள் பிரபாத் லோதாவும் தனது பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்