சென்னையில் இருந்து நெல்லை வந்த பஸ்சில் இளம்பெண்ணை கேலி செய்த 3 வாலிபர்கள் மீது தாக்குதல்

சென்னையில் இருந்து நெல்லை வந்த பஸ்சில் இளம் பெண்ணை கேலி செய்த 3 வாலிபர்கள் தாக்கப்பட்டனர்.

Update: 2020-02-14 22:00 GMT
நெல்லை, 

சென்னையில் இருந்து நெல்லை வந்த பஸ்சில் இளம் பெண்ணை கேலி செய்த 3 வாலிபர்கள் தாக்கப்பட்டனர்.

இளம் பெண் 

நெல்லையைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் சென்னை ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் விடுமுறை எடுத்து கொண்டு ஆம்னி பஸ்சில் நெல்லையை நோக்கி புறப்பட்டார். அதே பஸ்சில் அவருடன் வேலை செய்யும் 3 வாலிபர்கள் நெல்லை வந்தனர்.

அந்த வாலிபர்கள் இளம் பெண்ணை கேலி கிண்டல் செய்தனர். இது குறித்து அந்த பெண் தனது பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தார்.

வாலிபர்கள் மீது தாக்குதல் 

அந்த பெண்ணின் உறவினர்கள் நேற்று காலை நெல்லை வண்ணார்பேட்டை பஸ் நிறுத்தத்தில் காத்துக் கொண்டு இருந்தனர். காலை 7 மணிக்கு பஸ் வந்தது. பஸ்சில் இருந்து இளம் பெண் கீழே இறங்கினார்.

தொழிலதிபர் அவரது உறவினர்கள் பஸ்சில் ஏறி அந்த 3 வாலிபர்களையும் கீழே இறக்கினர். பின்னர் அந்த வாலிபர்களை சரமாரியாக தாக்கினர்.

இதை பார்த்த பொதுமக்கள் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் வந்தனர். வாலிபர்களை தாக்கியதை பற்றி அந்த கும்பலிடம் கேட்டனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

காரில் அழைத்து சென்றனர் 

இந்த பிரச்சினையே நாங்களே பேசி தீர்த்துக் கொள்கிறோம் என்று தொழிலதிபர் கூறினார். இதையடுத்து தொழிலதிபர் அவரது உறவினர்கள் ஒரு காரில் ஏறினர். மற்றொரு காரில் அந்த வாலிபர்களை ஏற்றி சென்றனர்.

இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்