முதுமலை வனப்பகுதியில் வறட்சி: உணவு, தண்ணீரை தேடி அலையும் வனவிலங்குகள்

முதுமலை வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீரை தேடி வனவிலங்குகள் அலைந்து திரிகின்றன.

Update: 2020-02-14 22:15 GMT
மசினகுடி,

தமிழகத்தில் உள்ள புலிகள் காப்பகங்களில் முதுமலை முக்கியமானதாக திகழ்கிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகள், சிறுத்தைப்புலிகள், காட்டுயானைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. மேலும் அரிய வகை தாவரங்களும், மரங்களும் உள்ளன. இங்கு வனவிலங்குகள் வாழ ஏற்ற கால நிலை, உணவு, தண்ணீர் இருப்பதால், அவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தொடர்ந்து மழை பெய்வது வழக்கம். அப்போது வனப்பகுதி பச்சை பசேல் என காட்சியளிக்கும். ஆனால் நவம்பர் மாதம் முதல் மே மாதம் வரை பனி மற்றும் கோடை காலமாக இருப்பதால், வனப்பகுதி வறட்சியை சந்திக்கிறது. குறிப்பாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வனப்பகுதி கடும் வறட்சியை சந்திக்கும். அப்போது காட்டுத்தீ ஏற்படுவது வாடிக்கை. மேலும் வனவிலங்குகளும் உணவு மற்றும் தண்ணீரை தேடி அலைந்து திரிவதை பார்க்க முடியும்.

இந்த நிலையில் முதுமலை வனப்பகுதியில் தற்போது வறட்சி தொடங்கி உள்ளது. இதனால் மரம், செடி, கொடிகளில் இலைகள் உதிர்ந்து, எளிதில் தீப்பற்றும் நிலையில் காணப்படுகிறது. மழைக்காலங்களில் வனப்பகுதி பசுமையாக இருக்கும்போது, புதர்களில் மறைந்திருக்கும் வனவிலங்குகளை காண்பது அரிதாகும். ஆனால் வனப்பகுதி வறட்சியில் இருக்கும்போது, புதர்களில் மறைந்திருக்கும் வனவிலங்குகள் கூட கண்ணுக்கு தெரிந்துவிடும். இதற்கு மரம், செடி, கொடிகளில் இலைகள் உதிர்ந்து காட்சியளிப்பதே காரணம் ஆகும். இதனால் தற்போது வனவிலங்குகளை எளிதாக காண முடிகிறது.

மேலும் நீர்நிலைகளும் வறண்டு வருவதால், வனவிலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இது தவிரபசுந்தீவன தட்டுப்பாடும் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் வனப்பகுதியில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் அலைந்து திரிகின்றன. அவை சாலைகளை கடப்பதை அடிக்கடி காண முடிகிறது. இதற்காகவே முதுமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

முதுமலையில் சமீப காலமாக புலிகள், சிறுத்தைப்புலிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவைகளை அடிக்கடி காண முடிவதற்கு, இதுவும் ஒரு காரணம்.மற்றொரு காரணம், வறட்சி தொடங்கி இருப்பது ஆகும். வாகன சவாரி செல்லும் சுற்றுலா பயணிகளும் வனவிலங்குகளை அடிக்கடி கண்டு ரசித்து செல்கின்றனர். வனப்பகுதி பசுமையாக இருக்கும்போது, மாமிச உண்ணிகளை காண்பது அரிது. ஆனால் வறட்சியை சந்திக்கும்போது, அவைகளை காண்பது எளிது. இதற்கு மரம், செடி, கொடிகளில் இலைகள் உதிர்ந்து விடுவதே காரணம். இதனால் தற்போது முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மேலும் வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்க தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்