ஆவடியில் பரிதாபம் கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து சிறுவன் பலி

ஆவடியில் கழிவுநீர் தொட்டிக்குள் தவறிவிழுந்து 5 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2020-02-14 22:30 GMT
ஆவடி, 

ஆவடி காந்திநகர், அன்பழகன் தெருவில் வசித்து வருபவர் காந்தி (வயது 39). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி வள்ளி (34). இவர்களுக்கு யசோதா(8) என்ற மகளும், சுமுகன்(5), சுவேகன்(5) என 2 மகன்களும் உள்ளனர்.

இரட்டையர்களான சுமுகன், சுவேகன் இருவரும் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சிறுவர்கள் இருவரும் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தனர்.

மாயம்

அப்போது சுமுகன் மட்டும் திடீரென மாயமானான். அக்கம் பக்கம் முழுவதும் தேடியும் அவனை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர், மகனை காணவில்லை என ஆவடி போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆவடி சரக போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி, இன்ஸ்பெக்டர் காளிராஜ் மற்றும் போலீசார் இரவோடு இரவாக சிறுவனை தேடும் முயற்சியில் இறங்கினர்.

சிறுவனை யாராவது கடத்தி இருப்பார்களா? அல்லது வேறு ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்து இருக்குமோ? என்ற அச்சத்தில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். சுமார் 2 மணிநேரம் ஆய்வு செய்ததில் சிறுவன் கடத்தப்பட்டதற்கான எந்த அறிகுறியும் பதிவாகவில்லை.

கழிவுநீர் தொட்டிக்குள் பிணம்

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் போலீசார் அவரது வீட்டை சுற்றிலும் டார்ச் லைட் அடித்து சிறுவனை தேடினர். அப்போது காந்தி வீட்டின் பின்புறம் சுமார் 8 அடி ஆழம் கொண்ட திறந்த நிலையில் உள்ள கழிவுநீர் தொட்டிக்குள் மாயமான சிறுவன் சுமுகன் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக கழிவுநீர் அகற்றும் லாரியை வரவழைத்து கழிவுநீரை வெளியேற்றினர். பின்னர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன் சுமுகன், எதிர்பாராதவிதமாக கழிவுநீர் தொட்டிக்குள் தவறிவிழுந்து இறந்து இருப்பதாக தெரிகிறது. மேலும் இது குறித்து ஆவடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்