பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலம்: முதல் தூண் அமைக்கும் பணி விரைவில் தொடங்குகிறது

பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலம் அமைக்கும் ஆயத்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதையடுத்து முதல் தூண் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

Update: 2020-02-14 22:15 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில்வே பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அது போல் நூற்றாண்டுகளை கடந்து மிகவும் பழமையான பாலமாக உள்ளதால், பாம்பன் கடலில் புதிதாக ரெயில் பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி அதற்காக ரூ.250 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

பாம்பனில் புதிய ரெயில் பாலம் அமைக்கும் பணி கடந்த நவம்பர் மாதம் பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது. அது முதல் கடந்த 3 மாதங்களாக பாம்பனில் புதிய ரெயில் பாலம் கட்டுவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி தூண்கள் அமைக்க பயன்படும் ராட்சத உபரகணரங்களை கடலில் கொண்டு செல்ல வசதியாக பாம்பன் வடக்கு கடற்ரையில் தற்காலிக பாலம் அமைக்கும் பணி கடந்த 2 மாதமாக நடைபெற்று வருகிறது.

மேலும் கடலில் மிதக்கும் வகையில், ஏராளமான உருளை வடிவிலான மிதவைகள் பாம்பன் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டு இறக்கி வைக்கப்பட்டுள்ளன. அதை ஒன்று சேர்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. புதிய ரெயில் பாலம் தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், இந்த மாத இறுதியில் பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலத்திற்காக முதல் தூண் அமைக்கும் பணிகள் தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பாம்பன் கடலில் 2½ கிலோ மீட்டர் நீளத்திற்கு அமையும் புதிய பாலத்திற்காக மொத்தம் 330 தூண்கள் கட்டப்படவுள்ளன. ஒரே நேரத்தில் 2 ரெயில்கள் செல்லும் வகையில் இருவழிப்பாதை பாலமாக கட்டப்பட உள்ளது. 2 வருடத்தில் புதிய ரெயில் பாலம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரெயில் பாலத்தின் மைய பகுதியில் மின் மோட்டார் மூலம் திறந்து மூடும் வகையில் கண்காணிப்பு கேமரா மற்றும் தொலைதொடர்பு வசதிகளுடன் கூடிய தூக்குப்பாலம் கட்டப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்