சென்னையில் போலீஸ் தடியடி சம்பவத்தை கண்டித்து முஸ்லிம்கள் சாலைமறியல் போராட்டம் - திருப்பூர், தாராபுரம், பல்லடத்தில் நடந்தது

சென்னையில் போலீஸ் தடியடி நடத்திய சம்பவத்தை கண்டித்து திருப்பூர், தாராபுரம், பல்லடத்தில் முஸ்லிம்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-02-14 22:30 GMT
திருப்பூர்,

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் நேற்று சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தினர்.

இந்த சம்பவத்தை கண்டித்து திருப்பூர் காங்கேயம் ரோடு சி.டி.சி.கார்னரில் நேற்று இரவு 10 மணி அளவில் முஸ்லிம் ஆண்கள், பெண்கள் மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் திரண்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். திரளானவர்கள் மறியல் போராட்டம் நடத்தியதால் அந்த வழியாக வாகன போக்குவரத்து தடைபட்டது. வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன.

சென்னையில் முஸ்லிம்கள் மீது போலீஸ் தடியடி நடத்திய சம்பவத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் செல்போன் விளக்கை ஒளிரச்செய்து ஒன்றுபோல் கைகளை உயர்த்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

போலீஸ் உதவி கமிஷனர்கள் நவீன்குமார், வெற்றிவேந்தன் மற்றும் திரளான போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். இரவு 11.15 மணி வரை போராட்டம் தொடர்ந்தது. அதன்பிறகு போராட்டத்தை தற்காலிக ஒத்திவைப்பதாக தெரிவித்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

இதுபோல் பல்லடம், மங்கலம் நால்ரோடு, தாராபுரத்திலும் முஸ்லிம்கள் சாலைமறியல் செய்து போராட்டம் நடத்தினார்கள். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்