தனியார் நிறுவன வங்கி கணக்கில் ரூ.4 கோடி அபேஸ் 7 பேர் கைது

தனியார் நிறுவன வங்கி கணக்கில் இருந்து ரூ.4 கோடியே 10 லட்சம் அபேஸ் செய்த வங்கி ஊழியர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-02-14 22:47 GMT
மும்பை,

நவிமும்பையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று அண்மையில் தங்கள் நிறுவன வங்கி கணக்கு தொடர்பாக ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் முறைகேடுகள் நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தனியார் நிறுவனம் சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

இந்த புகாரின் பேரின் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நிறுவனத்தின் பெயரில் போலி சான்றிதழ்கள் வங்கியில் கொடுத்து நிறுவனம் பெயரில் வரும் காசோலைகள் மற்றும் பணம் மற்றொரு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டது தெரியவந்தது. இப்படி சுமார் ரூ.4 கோடியே 10 லட்சம் வரையில் மோசடி நடந்தது தெரியவந்தது.

7 பேர் சிக்கினர்

இந்த மோசடி தொடர்பாக போலீசார் முதலில் வங்கி ஊழியரான முகேஷ் குப்தா (வயது45) என்பவரை கைது செய்தனர்.

மேலும் அவர் கொடுத்த தகவலின்படி மோசடியில் தொடர்புடைய நெருலை சேர்ந்த வக்கீல் அராபத் சேக் (33) அமிதாப் மிஸ்ரா (61), போலி சான்றிதழ் தயாரித்த ஜாவேத் குரோஷி (55), ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் ராம்கிஷன் பாண்டே (51), வியாபாரி வினோத் போஸ்லே (44), டோம்பிவிலியை சேர்ந்த வியாபாரி ஸ்ரீஜித் (39) ஆகியோரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்