சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை: பாகூர் ஏரியில் கலெக்டர் ஆய்வு

பாகூர் ஏரியை சுற்றுலாத்தலமாக மாற்ற கலெக்டர் அருண் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2020-02-14 23:58 GMT
பாகூர்,

புதுவை மாநிலத்தின் 2-வது பெரிய ஏரியான பாகூர் ஏரியை சுற்றுலாத்தலமாக மாற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் ஏரிக்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் புதுவை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் நேற்று காலை பாகூர் ஏரியில் ஆய்வு மேற்கொண்டார். ஏரிக்கரையில் சிறிது தூரம் நடந்து சென்று நீர்ப்பிடிப்பு பகுதிகளை பார்வையிட்டார்.

அப்போது பாகூர் ஏரியை உருவாக்கிய நடன மங்கைகள் சிங்காரி, பங்காரி ஆகியோர் குறித்து கிராம மக்கள் தெரிவித்தனர். அவர்களுக்கு சிலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறினார்.

மேலும் ஏரி பகுதியில் சிறுவர்கள் பூங்கா, நடைபாதை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மற்றும் ஊசுட்டேரி போல் படகு சவாரி தொடங்கி, அதன் மூலம் வரும் வருமானத்தில் ஏரியை பராமரிப்பது குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் அருண் ஆலோசனை நடத்தினார்.

இதனை தொடர்ந்து தனியார் அமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி மருத்துவக்கல்லூரியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை கலெக்டர் அருண் தொடங்கிவைத்தார். பின்னர் பாகூர் மூலநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது கோவிலின் வரலாறு குறித்து அர்ச்சகர் பாபு கூறினார்.

மேலும் செய்திகள்