வாகனங்களுக்கு இனி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தகுதிச்சான்று போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு

அனைத்து போக்குவரத்து வாகனங்களுக்கும் இனி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தகுதிச்சான்று வழங்கப்படும் என்று போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

Update: 2020-02-15 22:15 GMT
சென்னை,

தமிழகத்தில் போக்குவரத்து வாகனங்களுக்கு மத்திய மோட்டார் வாகன விதிகளின்படி, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உள்ள மோட்டார்  வாகன ஆய்வாளர்கள் ஆண்டுக்கு ஒருமுறை வாகனத்தை ஆய்வு  செய்கின்றனர். அதில் சாலையில் இயக்க தகுதி பெற்ற வாகனங்களுக்கு  தகுதிச்சான்று(எப்.சி.) வழங்கப்படுகிறது. தற்போது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் புதிதாக சட்டத் திருத்தத்தை (2-11-2018) கொண்டு வந்துள்ளது.

அந்த சட்டத்திருத்தத்தின்படி அனைத்து போக்குவரத்து வாகனங்களுக்கும், புதிதாக பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 8 ஆண்டுகள் வரை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 8 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறையும் தகுதிச்சான்று வழங்கப்படும் என்று போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், “தகுதிச்சான்று வழங்குவது தொடர்பாக புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதால், போக்குவரத்துக்கான இணையதளத்தில் அதற்கேற்ற வகையில் மாற்றம் செய்ய வேண்டும்” என தேசிய தகவல் மையத்துக்கு (என்.ஐ.சி.) தமிழக போக்குவரத்து ஆணையர் கடிதம் எழுதி உள்ளார்.

மேலும் செய்திகள்