அடுத்த மாதம் 8-ந் தேதி அடிக்கல் நாட்டு விழா: திருவள்ளூரில் அரசு மருத்துவக்கல்லூரி அமையும் இடத்தை அமைச்சர் ஆய்வு

திருவள்ளூரில் அரசு மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான அடிக்கல்நாட்டு விழா அடுத்த மாதம் 8-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், அமைச்சர், கலெக்டர் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Update: 2020-02-16 23:00 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து திருவள்ளூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என அரசு உறுதியளித்தது.

இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அருகில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

இந்த நிலையில் கல்லூரி அமைக்க ரூ.321 கோடி மதிப்பீட்டில் மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கியுள்ளது. இதைத்தொடர்ந்து மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் 8-ந் தேதி நடைபெற உள்ளது.

இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கல்லூரி கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

இதைத்தொடர்ந்து மருத்துவக் கல்லூரி கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பெஞ்சமின், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அமைச்சர் பா.பெஞ்சமின் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க அடிக்கல் நாட்டு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும், துரிதமாக இரவு பகல் பாராமல் சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அப்போது அவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லோகநாயகி, அ.தி.மு.க.வின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், பொன்னேரி எம்.எல்.ஏ.வுமான சிறுணியம் பி.பலராமன், திருவள்ளூர் முன்னாள் நகர்மன்றத் தலைவர் கமாண்டோ அ. பாஸ்கரன், பூந்தமல்லி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் காட்டுப்பாக்கம் திருநாவுக்கரசு, திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சிற்றம் ஜெ.சீனிவாசன், கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் கே. சுதாகர், ஒன்றிய பொறுப்பாளர் கடம்பத்தூர் கே.ரமேஷ் உட்பட திரளான அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்