ஜோலார்பேட்டையில் ஏ.சி. வெடித்து ரெயில்வே போலீஸ் சாவு - மனைவியும் இறந்ததால் சோகம்

ஜோலார்பேட்டையில் ஏ.சி. வெடித்து ரெயில்வே பாதுகாப்பு படை வீரரும் அவரது மனைவியும் பலியானதால் சோகம் ஏற்பட்டுள்ளது.

Update: 2020-02-16 23:30 GMT
ஜோலார்பேட்டை,

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த வக்கணம்பட்டியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 45). இவர் செங்கல்பட்டில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி வெற்றிசெல்வி. இவர்களது வீடு திருப்பத்தூர் மஞ்சு தியேட்டர் பின்புற பகுதியில் உள்ளது.

இவர்களது மகள் சவுமியா (8), திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

நேற்று முன்தினம் இரவு சண்முகம் குடும்பத்தினருடன் வீட்டில் ஏ.சி. போட்டுவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 3 மணி அளவில் சவுமியா கழிவறைக்கு செல்வதற்காக தாய் வெற்றிசெல்வியை எழுப்பினாள். இதனையடுத்து குழந்தையை வெற்றிசெல்வி கழிவறைக்கு அழைத்து சென்றார்.

அப்போது அறையில் இருந்த ஏ.சி. பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் வெற்றிசெல்வி குழந்தையை கழிவறையிலேயே விட்டு விட்டு அறைக்கு சென்றார். அப்போது நேரத்தில் அறை முழுவதும் தீ பரவி புகை மண்டலமாக காட்சியளித்தது. மேலும் மின்சாரமும் தடைபட்டது. இதனால் வெற்றிசெல்வி அலறினார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது சண்முகம், வெற்றிசெல்வி ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். குழந்தை சவுமியா கழிவறையில் இருந்ததால் காயமின்றி உயிர் தப்பினாள்.

பின்னர் படுகாயம் அடைந்த தம்பதியை அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டபின்னர் உடனடியாக அவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகம் பரிதாபமாக உயிரிழந்தார்.வெற்றிச்செல்விக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவரும் இரவு இறந்து விட்டார்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.ஏ.சி.எந்திரம் வெடித்து போலீஸ்காரரும் அவரது மனைவியும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பெற்றோரை இழந்து தவிக்கும் அவர்களது 8 வயது மகளுக்கு மகளுக்கு உறவினர்கள் ஆறுதல்கூறி வருகின்றனர்.

மேலும் செய்திகள்