மோட்டார் சைக்கிள்- லாரி மோதல் : பெண் ஆடிட்டர் சாவு - தந்தை படுகாயம்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் ஆடிட்டர் பரிதாபமாக இறந்தார். அவருடைய தந்தை படுகாயம் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2020-02-17 23:30 GMT
சரவணம்பட்டி,

கோவை எஸ்.எஸ்.குளத்தை சேர்ந்தவர் கனகராஜன். ஆடிட்டர். இவரது மனைவி பத்மாவதி. இவர்களது 2-வது மகள் மோனிஷா (வயது 24). மோனிஷா கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். சி.ஏ. முடித்து விட்டு ஆடிட்டராக பயிற்சி பெற்று வந்தார்.

சம்பவத்தன்று இரவு கனகராஜ் தனது மகள் மோனிஷாவுடன் மோட்டார் சைக்கிளில் கோவை- சத்தி சாலையில் குரும்பபாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பின்னால் வந்த லாரி ஒன்று திடீரென்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கனகராஜ் மற்றும் மோனிஷா ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த மோனிஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கனகராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த கோவில்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மோனிஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அந்த லாரியை அடையாளம் காணும் வகையில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்