திருமணம் செய்துகொள்வதாக கூறி விதவையிடம் 25 பவுன் நகை, பணம் மோசடி வாலிபர் கைது

திருமணம் செய்து கொள்வதாக கூறி விதவையிடம் 25 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-02-17 22:45 GMT
செங்குன்றம், 

சென்னையை அடுத்த மாதவரம் கே.கே.ஆர். கார்டன் பகுதியைச் சேர்ந்த 24 வயது விதவை, மறுமணம் செய்து கொள்வதற்காக வரன்வேண்டி திருமண தகவல் மையத்தில பதிவு செய்து இருந்தார்.

இதனை பார்த்த ரமேஷ் (வயது 34) என்பவர், அந்த விதவையை தொடர்பு கொண்டார். தான் துறைமுகத்தில் அதிகாரியாக இருப்பதாகவும், ஒரு விதவையை திருமணம் செய்துகொள்வதே தனது லட்சியம் எனவும் கூறினார்.

நகை-பணத்துடன் மாயம்

இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரமேசுக்கும், விதவை பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்துக்கு 25 பவுன் தங்க நகைகளும், ரூ.1 லட்சமும் வரதட்சணையாக பேசப்பட்டது.

விதவையின் பெற்றோர் திருமண அழைப்பிதழ் அச்சிட்டு உறவினர்களுக்கு வழங்கி வந்தனர். நிச்சயதார்த்தம் முடிந்து சில நாட்கள் விதவை வீட்டில் தங்கி இருந்த ரமேஷ், தனது நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வருவதாக கூறிவிட்டு வரதட்சணைக்காக வீட்டில் வாங்கி வைத்து இருந்த 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். ஆனால் அதன்பிறகு அவர் திரும்பி வரவில்லை.

அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அதன்பிறகுதான் வீட்டில் இருந்த நகை, பணம் மாயமாகி இருப்பதை கண்ட விதவையின் பெற்றோர், ரமேஷ் மோசடி செய்துவிட்டதை அறிந்தனர்.

ஏற்கனவே திருமணம்

இதுபற்றி மாதவரம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். அதில் திருநின்றவூர் கொசவம்பாளையம் கெங்குசாமி நாயுடு தெருவைச் சேர்ந்த பி.ஏ. பட்டதாரியான ரமேசுக்கு, ஏற்கனவே பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணமாகி, 2 குழந்தைகள் இருப்பது தெரிந்தது.

மாமியார் வீடான பம்மலில் வசித்து வந்த ரமேஷ், தான் ஒரு அரசு அதிகாரி என கூறி அந்த பெண்ணை திருமணம் செய்து உள்ளார். ஆனால் திருமணத்துக்கு பிறகு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

வாலிபர் கைது

மேலும் அவர், வேலைக்கு எங்கும் செல்லாமல் பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறியும் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து இருப்பதும் விசாரணையில் தெரிந்தது.

இந்தநிலையில் தலைமறைவான ரமேஷ், நேற்று முன்தினம் இரவு திருநின்றவூர் அருகே மறைந்திருந்தபோது போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்