ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலத்தை மீட்டுத்தரக்கோரி - கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலத்தை மீட்டுத்தரக்கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-02-17 22:45 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 9 மணியில் இருந்தே கலெக்டர் அலுவலகத்துக்கு பொதுமக்கள் வரத்தொடங்கினர். இந்த நிலையில் மகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு ஒரு பெண் வந்தார். அப்போது கூட்ட அரங்குக்கு செல்லும் வழியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அந்த பெண் கொண்டு வந்த பையை சோதனையிட்டனர்.

அப்போது அதில் ஒரு பிளாஸ்டிக் கேன் இருந்தது. அதில் என்ன இருக்கிறது என்று அந்த பெண்ணிடம் போலீசார் கேட்டுக்கொண்டிருந்த போதே, அந்த பெண் பையில் இருந்த பிளாஸ்டிக் கேனை எடுத்து அதில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அந்த பெண்ணை தடுத்த போலீசார், அவரிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பிடுங்கி அப்புறப்படுத்தினர்.

பின்னர் அந்த பெண் மீது தண்ணீரை ஊற்றினர். அதையடுத்து போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் நிலக்கோட்டை தாலுகா வத்தலக்குண்டுவை சேர்ந்த ஆல்பர்ட் மனைவி ஜெயந்தி (வயது 45) என்பதும், கோம்பைபட்டி ஊராட்சி சின்னுப்பட்டியில் அவருக்கு சொந்தமாக வீடு, நிலம் இருப்பதும் தெரியவந்தது. மேலும் அந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுவதாகவும், அதுகுறித்து அவர்களிடம் கேட்டால் ஜெயந்தி மற்றும் குடும்பத்தினரை ஆக்கிரமிப்பாளர்கள் தாக்க வருகின்றனர். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசில் இரண்டு முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அவரின் வாழ்வாதாரம் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க வந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

பின்னர் அவர், திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டார். அதன் பின்பு மீண்டும் கலெக்டர் அலுவலகம் வந்த ஜெயந்தியை, போலீசார் அழைத்துச்சென்று கலெக்டரிடம் அவருடைய பிரச்சினை குறித்து மனு கொடுக்க வைத்தனர். மனுவை பெற்ற கலெக்டர் விஜயலட்சுமி, உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்