விதை பரிசோதனை முடிவுகளை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் அதிகாரி அறிவுரை

விதை பரிசோதனை முடிவுகளை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என விதை சான்று இணை இயக்குனர் ராஜேந்திரன் கூறினார்.

Update: 2020-02-18 23:00 GMT
திருவாரூர்,

திருவாரூர் விதை பரிசோதனை நிலையத்தில் விதை பரிசோதனை பணிகள் குறித்து கோவை விதை சான்று மற்றும் அங்ககச்சான்று இணை இயக்குனர் ராஜேந்திரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விதை மாதிரிகள் பெறுவது, விதைகளின் தரக்காரணிகளான ஈரப்பதம், புறத்தூய்மை மற்றும் முளைப்புத்திறன் ஆய்வு பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார். முளைப்புத்திறன் சோதனை அறையில் பரிசோதனையில் உள்ள நெல் மற்றும் பருத்தி விதை நாற்றுகள், அறையின் வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் வெளிச்சத்தின் அளவு குறித்தும் கேட்டறிந்தார்.

விதை பரிசோதனை முடிவு

விதை வங்கியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கரு விதைகள் மற்றும் 100 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை பார்வையிட்டார். பாரம்பரிய நெல் ரகங்களின் முக்கியத்துவம், மருத்துவ பயன்பாடுகள் குறித்தும் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

விதை பரிசோதனை முடிவுகளை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு தரமான விதைகளை காலத்தில் வழங்குவதில் விதை பரிசோதனை நிலையத்தின் ஆய்வு முடிவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தற்போது நெல் தரிசு கோடை பருத்தி பயிர் விதைகளையும், எள் மற்றும் கோடைக்கால நெல் ரகங்களையும் விதைப்பிற்கு முன் விதை பரிசோதனை செய்து உயர் விளைச்சலை விவசாயிகள் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது விதைச்சான்று உதவி இயக்குனர் ஜெயசீலன், மூத்த வேளாண்மை அலுவலர் கண்ணன், வேளாண்மை அலுவலர் புவனேஸ்வரி மற்றும் விதைச்சான்று அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்