‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான கிரு‌‌ஷ்ணகிரி மாணவரின் ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு - இடைத்தரகரும் மனு தாக்கல்

நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக கைதான கிரு‌‌ஷ்ணகிரி மாணவரின் ஜாமீன் மனு மீது தேனி மாவட்ட செசன்சு கோர்ட்டில் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. இடைத்தரகரும் மனு தாக்கல் செய்துள்ளார்.

Update: 2020-02-18 22:00 GMT
தேனி,

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தேனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன் உள்பட மொத்தம் 5 மாணவர்கள், ஒரு மாணவி மற்றும் மாணவர்களின் பெற்றோர் 6 பேர் மற்றும் இடைத்தரகர்கள் 2 பேர் என மொத்தம் 14 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 4 மாணவர்கள், ஒரு மாணவி, பெற்றோர் 6 பேர் ஆகிய 11 பேர் ஜாமீனில் வெளியே வந்து விட்டனர். தர்மபுரியை சேர்ந்த இடைத்தரகர் முருகன் என்ற ஆறுமுகம் என்பவருக்கும் கடந்த வாரம் ஜாமீன் கிடைத்தது.

தற்போது கிரு‌‌ஷ்ணகிரியை சேர்ந்த மாணவர் பவித்ரன், இடைத்தரகர் மனோகரன் ஆகிய 2 பேர் மட்டும் சிறையில் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து மாணவர் பவித்ரனுக்கு ஜாமீன் கேட்டு மாவட்ட செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அப்துல்காதர் முன்னிலையில் நேற்று நடந்தது. இந்த மாணவரின் தந்தை இன்னும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள நிலையில், ஜாமீன் மனு வழங்க சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த மனு மீதான விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கில் இடைத்தரகர் மனோகரனுக்கு ஜாமீன் கேட்டு மாவட்ட செசன்சு கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

மேலும் செய்திகள்