4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு ஜெயில் ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

ஈரோட்டில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2020-02-18 22:32 GMT
ஈரோடு,

ஈரோடு திண்டல் புதுக்காலனி பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 50). இவர் கடந்த 22-2-2013 அன்று அவரது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது 4 வயது சிறுமி உள்பட 3 சிறுமிகள் அங்கு விளையாடிக்கொண்டு இருந்தனர். 4 வயது சிறுமியிடம் குப்புசாமி நைசாக பேசினார். சாப்பிடுவதற்கு இனிப்பு தருவதாக கூறிய அவர் வீட்டுக்கு அழைத்துச்சென்றார். அவர் வீட்டுக்குள் சிறுமி சென்ற சிறிது நேரத்தில், சிறுமியின் தாயார் குழந்தையை தேடி வந்தார். அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது குப்புசாமியுடன் சென்றதை கேள்விப்பட்டார். உடனடியாக அவர் குப்புசாமியின் வீட்டுக்கு வந்து கதவை தட்டினார்.

கதவை திறந்தபோது குப்புசாமி நிர்வாணமாக இருந்தார். அவர் சிறுமியின் தாயாரை அவதூறான வார்த்தைகளால் திட்டியதுடன், கொலை மிரட்டலும் விடுத்துவிட்டு அங்கிருந்து ஒரு லுங்கியை எடுத்துக்கட்டிக்கொண்டு வெளியே ஓடினார். உள்ளே சென்று பார்த்தபோது சிறுமி ஆடைகள் எதுவும் இன்றி அழுதுகொண்டே இருந்தார். அவரது கன்னம், தொடைகளில் காயம் இருந்தது. அதிர்ஷ்டவசமாக சிறுமியின் தாயார் வந்ததால் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் சிறுமி பாதுகாக்கப்பட்டார்.

5 ஆண்டு ஜெயில்

இதுகுறித்து சிறுமியின் தாயார் ஈரோடு தாலுகா போலீசில் புகார் தெரிவித்தார். பாலியல் தொல்லைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து குப்புசாமியை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக ஈரோடு மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை நீதிபதி ஆர்.மாலதி விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

அதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்துக்காக குப்புசாமிக்கு, 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்கவும் அந்த தீர்ப்பில் கூறி இருந்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரண உதவியாக ரூ.1 லட்சம் தமிழக அரசு வழங்கவும் நீதிபதி ஆர்.மாலதி பரிந்துரை செய்து இருந்தார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜி.டி.ஆர்.சுமதி ஆஜர் ஆனார்.

மேலும் செய்திகள்