சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற திராவிடர் விடுதலை கழகத்தினர் 100 பேர் கைது

சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற திராவிடர் விடுதலை கழகத்தினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-02-18 23:49 GMT
புதுச்சேரி,

புதுவை மாநிலத்தின் வருவாயை பெருக்கும் விதமாக கேசினோ (சூதாட்ட விடுதி), லாட்டரி விற்பனை போன்ற திட்டங்களை அரசு கொண்க்ஷடு வர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அனுமதி ரத்து

இந்த திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை கிராமப்புற பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள திராவிடர் விடுதலை கழகம் முடிவு செய்து அதற்காக போலீசில் அனுமதி பெறப்பட்டது. இந்த அனுமதியை போலீசார் திடீரென ரத்து செய்தனர்.

முதல்-அமைச்சரின் உத்தரவின்பேரிலேயே அனுமதி ரத்து செய்யப்பட்டதாக திராவிடர் விடுதலை கழகத்தினர் குற்றஞ்சாட்டினர். இதை கண்டித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அவர்கள் அறிவித்தனர்.

இதற்காக சுதேசி மில் அருகே நேற்று அவர்கள் கூடினார்கள். அங்கிருந்து திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையில் புறப்பட்டனர். போராட்டத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற கொறடா வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து அவர்கள் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

கைது

ஊர்வலத்தில் மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகநாதன், மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாறன், தமிழர் களம் அழகர், தமிழக வாழ்வுரிமை கட்சி ஸ்ரீதர் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஊர்வலம் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே சென்றபோது அவர்களை போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

அப்போது சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் கரிக் குடோனில் தங்கவைக்கப்பட்டு பின்னர் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்