குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் நோக்கி முஸ்லிம்கள் ஊர்வலம்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் நோக்கி முஸ்லிம்கள் ஊர்வலமாக சென்றனர்.

Update: 2020-02-19 22:30 GMT
திண்டுக்கல்,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல்லில், முஸ்லிம்கள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை, அனைத்து முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் சில கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கானோர் திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா அருகே நேற்று திரண்டனர்.

பின்னர் கைகளில் தேசிய கொடியை ஏந்தியபடி அவர் கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். இதையொட்டி போலீஸ் டி.ஐ.ஜி. ஜோஷி நிர்மல் குமார் மேற்பார்வையில், போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் ஏராளமான போலீசார் கலெக்டர் அலுவலகம் முன்பு குவிக்கப்பட்டனர்.

மேலும் கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயில் மற்றும் கலெக்டர் அலுவலகத்துக்கு செல்லும் அனைத்து பாதைகளிலும் தடுப்புகளை ஏற்படுத்தி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தடைந்த முஸ்லிம்கள் உள்ளே செல்ல முடியவில்லை.

இதனையடுத்து கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயில் அருகே திரண்ட அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட பிற அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். மேலும் அவர்களும் முஸ்லிம்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கலெக்டர் அலுவலகம் அருகே முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

மேலும் செய்திகள்