பெரியபாளையம் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு மதுபாட்டில்களை மர்மநபர்கள் அள்ளிச் சென்றனரா?

பெரியபாளையம் அருகே டாஸ்மாக் மதுபான கடையின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடிச் சென்று விட்டனர். உள்ளே புகுந்த திருடர்கள் மதுபாட்டில்களை அள்ளிச் சென்றார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2020-02-19 22:30 GMT
பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே செங்காத்தாகுளம் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் ஊத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (வயது45) என்பவர் மேற்பார்வையாளராக இருந்து வருகிறார்.

நடராஜன், துரை ஆகிய 2 பேரும் விற்பனையாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு கடை முடிந்ததும், விற்பனை பணமான ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 960-ஐ சீனிவாசன் எடுத்துக்கொண்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

இதையடுத்து, நேற்று விடியற்காலை அந்த வழியாக சென்றவர்கள் டாஸ்மாக் கடையின் இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு பெரியபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

பணம் திருட்டு

இதையறிந்த இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் மேற்பார்வையாளரான சீனிவாசனும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.

அதன் பின்னர், கடையின் உள்ளே போலீசார் சென்று சோதனை நடத்தியதில், பணப்பெட்டியை உடைத்து சுமார் ரூ.8 ஆயிரம் பணத்தை திருடர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

மேலும் இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடையில் மது பாட்டில்களை மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனரா? என்பது குறித்தும் விசாரித்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்