மாணவர்களை பக்குவப்படுத்தும் வகையில் கல்வி முறையில் மாற்றம் வேண்டும் கவர்னர் பேச்சு

மாணவர்களை பக்குவப்படுத்தும் வகையில் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரப்படவேண்டும் என்று திருச்சியில் நடந்த விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.

Update: 2020-02-20 00:30 GMT
திருச்சி,

‘சிக்‌ஷா சன்ஸ்கிருத்தி உத்தன் நியாஸ்’ என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் திருச்சி தேசிய கல்லூரியில் ஞானோத்சவ் -2020 என்ற கல்வி திருவிழா நேற்று தொடங்கியது.. பள்ளி, கல்லூரிகளில் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு மாணவர்களை ஒழுக்க நெறிக்குள் உட்படுத்தி அவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையில் நடத்தப்பட்ட இந்த விழாவை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசும்போது கூறியதாவது:-

உலகின் பரப்பளவில் ஏழாவது பெரிய நாடு இந்தியா. பழங்காலத்தில் இந்தியாவில் இருந்த நாலந்தா போன்ற பல்கலைக்கழகங்களில் உலகின் பல நாடுகளில் இருந்தும் வந்தவர்கள் உயர்கல்வி கற்று சென்றிருப்பதாக வரலாற்று தகவல்கள் உள்ளன. இந்தியாவில் தற்போது 993 பல்கலைக்கழகங்களும், 39 ஆயிரத்து 931 கல்லூரிகளும் உள்ளன. இந்தியாவில் உயர்கல்வி பயின்றவர்களின் எண்ணிக்கை 25.8 சதவீதமாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் 49.5 சதவீதத்தினர் உயர்கல்வி பயின்று உள்ளனர். அந்த வகையில் உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.

பக்குவப்படுத்தும் கல்வி

இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 134 கோடியில் 70 கோடி பேர் இளைஞர்களாக உள்ளனர். அவர்களை நல்வழிப்படுத்தி சிறந்த கண்டு பிடிப்பாளர்களாக, விஞ்ஞானிகளாக உருவாக்கினால் இந்தியாவை உலக அரங்கில் வல்லரசு நாடாக்கி காட்ட முடியும். அதற்கு கல்வி முறையில் மாற்றம் தேவை.

நமது கல்வித்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து மாணவர்களை பக்குவப்படுத்தும் வகையில் கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படவேண்டும். அதற்கு இதுபோன்ற கல்வித்திருவிழாக்கள் நிச்சயம் உறுதுணையாக இருக்கும். தாய்மொழிக்கல்விக்கும் முக்கியத்துவம் தரவேண்டும்.

மத நம்பிக்கை

இந்துக்கள் ராமர் மீது பக்தி கொண்டிருப்பதை போன்று இஸ்லாமியர்கள் அவர்களது புனித நூலான குரான் மீதும், கிறிஸ்தவர்கள் பைபிள் மீதும் நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். இப்படி மத ரீதியான நம்பிக்கைகள் தான் மனிதனை நல்வழிப்படுத்துகின்றன. வினோபா பாவே, விவேகானந்தர் போன்ற துறவிகள் இதனை நமக்கு போதித்துவிட்டு சென்றிருக்கிறார்கள். எனவே நமது கல்வி திட்டங்கள் நீதிபோதனைகளின் அடிப்படையில் இருக்கவேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தனது பதவி காலத்தில் எளிமையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடந்து கொண்டார். அவர் தனது ஐந்தாண்டு கால பதவி முடிந்து வெளியே செல்லும்போது கையில் ஒரு சூட்கேசுடன் தான் சென்றார். அவரது வாழ்க்கையை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டும். நம்முடைய தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யும் வகையில் வாழ கற்றுக்கொண்டால் ஊழலுக்கு இடம் இருக்காது.

இவ்வாறு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.

துணைவேந்தர்

சிக்‌ஷா சன்ஸ்கிருத்தி உத்தன் நியாஸ் அமைப்பின் தேசிய செயலாளர் அதுல் கோத்தாரி, தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் வினோத் ஆகியோர் கல்வி திருவிழாவின் நோக்கம் பற்றி பேசினார்கள். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் மணிசங்கர் வாழ்த்தி பேசினார். முன்னதாக தேசிய கல்லூரி முதல்வர் சுந்தரராமன் வரவேற்று பேசினார். இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து 65 கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழா முடிந்ததும் கவர்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டார். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சுற்றுலா மாளிகைக்கு சென்றார். முன்னதாக நேற்று காலை விமானம் மூலம் திருச்சி வந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

இந்த கல்வி திருவிழா மற்றும் கண்காட்சி இன்றும் நடக்கிறது. இன்றைய நிகழ்ச்சியில் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சே‌‌ஷய்யன் கலந்து கொண்டு பேசுகிறார்.

மேலும் செய்திகள்