குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திருவாரூரில், இஸ்லாமியர்கள் ஊர்வலம்- ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திருவாரூரில் இஸ்லாமியர்கள் ஊர்வலம்-ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2020-02-19 23:30 GMT
திருவாரூர்,

திருவாரூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட போவதாக ஜமாத்துல் உலமா சபை தலைமையில் இஸ்லாமியர் கூட்டமைப்பினர் அறிவித்து இருந்தனர். அதற்கு போலீசார் அனுமதி தர மறுத்தனர். இதனையடுத்து கலெக்டர் அலுவலகம் முன்பாக நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு அருகில் ஆர்ப்பாட்டம் நடத்திட அனுமதி அளித்தனர்.

அதன்படி நேற்று விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில் இருந்து இஸ்லாமியர்கள் ஊர்வலமாக புறப்பட்டு நுகர்பொருள் வாணிப கிடங்கு அருகில் போலீசார் தடுப்புகளை அமைத்த இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் தலைவர் முகமது இல்யாஸ் தலைமை தாங்கினார். செயலாளர் முகமது இஸ்மாயில், பொருளாளர் அப்துர் ரஸ்மான் ரஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலெக்டரிடம் மனு

இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசை கண்டித்து கோ‌‌ஷங்கள் எழுப்பினர். இதனையடுத்து இஸ்லாமிய அமைப்பின் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் ஆனந்திடம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி மனு அளித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன் மேற்பார்வையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தினால் திருவாரூர்-தஞ்சை சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக திருவாரூரில் இருந்து தஞ்சை செல்லும் பஸ்கள் பவித்திரமாணிக்கம், காட்டூர், திருகண்ணமங்கை, அம்மையப்பன் வழியாகவும், தஞ்சையில் இருந்து வரும் பஸ்கள் மருத்துவக்கல்லூரி சாலை வழியாக விளமல் ஆயுதப்படை மைதானம் வழியாக இயக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.

மேலும் செய்திகள்