குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தஞ்சையில், முஸ்லிம்கள் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தஞ்சையில் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றவர்களை போலீசார் தடுத்ததால் பரபரப்பு.

Update: 2020-02-20 00:00 GMT
தஞ்சாவூர்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆர்ப்பாட்டம், ஊர்வலம், மனித சங்கிலி, முற்றுகை போராட்டம், தர்ணா, காத்திருப்பு போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தஞ்சை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை சார்பில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி தலைவர் அய்யூப்கான் தலைமையில் செயலாளர் ஜபருல்லா, பொருளாளர் ஹாஜாமுகைதீன் ஆகியோர் முன்னிலையில் முஸ்லிம்கள் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் திருமணமண்டபம் முன்பு திரண்டனர்.

ஊர்வலம்

பின்னர் அவர்கள் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். பைபாஸ் சாலையில் உள்ள டேன்டக்ஸ் ரவுண்டானா அருகே சென்ற போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அங்கேயே நின்று கோ‌‌ஷங்கள் எழுப்பினர். குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைபோல தமிழக அரசும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் இது தொடர்பான பதாகைகளையும் ஏந்தி வந்தனர்.

போலீசார் குவிப்பு

இதில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். முஸ்லிம்களின் போராட்டத்தையொட்டி அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

மேலும் செய்திகள்