மன அழுத்தத்தால் பள்ளி செல்லாத 12 மாணவர்கள் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கைகோரி பெற்றோர்கள் போராட்டம்

கரூர் அருகே மன அழுத்தத்தால் 12 மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. இதனால் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கைகோரி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-02-19 23:00 GMT
வெள்ளியணை,

கரூர் மாவட்டம், ஜெகதாபி அருகே உள்ள பொரணியில் அரசு மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அல்லாளிகவுண்டனூர், ஆனந்தகவுண்டனூர், குப்பகவுண்டனூர், சுப்பாரெட்டியூர், பொம்மணத்துப்பட்டி, பொரணி ஆகிய ஊர்களை சேர்ந்த சுமார் 280-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 10-ம் வகுப்பில் 28 மாணவர்கள் படித்து வந்தனர். இந்தநிலையில் இந்த கல்வி ஆண்டில் பள்ளி தொடங்கிய சில நாட்களிலேயே 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளில் சிலர் ஒவ்வொருவராக பள்ளிக்கு செல்ல மாட்டோம் என பெற்றோர்களிடம் கூறி பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளனர். பெற்றோர்கள் வற்புறுத்தி கூறியும் பள்ளி செல்லாமல் மாணவர்களில் சிலர் கரூரிலுள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இவ்வாறு 12 மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்ல மறுத்தது பெற்றோர்கள் மற்றும் அப் பகுதி பொதுமக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் விசாரித்தபோது, படிப்பில் சிறிது குறைவான மதிப்பெண் எடுத்த தங்களை தலைமை ஆசிரியை பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சியை காட்டவேண்டும் என்பதால், எங்களை பள்ளியிலிருந்து நிற்க வேண்டும் என பல்வேறு வகையில் மனஅழுத்தம் கொடுத்தார் என்று கூறியுள்ளனர்.

போராட்டம்

இதனையடுத்து இந்த பிரச்சினை குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும், நின்ற மாணவர்களை பள்ளியில் சேர்த்து மீண்டும் படிப்பை தொடரவும் உரிய நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட கலெக்டரிடம் பெற்றோர்கள், பொதுமக்கள் கடந்த சில நாட்களுக்கு முன் மனு அளித்தனர். ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று காலை பொரணி மாரியம்மன் கோவில் அருகே ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தலைமை ஆசிரியையை பணியிட மாறுதல் செய்யவும், நிறுத்தப்பட்ட மாணவர்களை பள்ளியில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

நடவடிக்கை உறுதி

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர் சிவராமன் மற்றும் வெள்ளியணை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்ட மாணவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். இதுகுறித்த அறிக்கை கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்