குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: மதுரை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட திரண்டு சென்ற முஸ்லிம்கள்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முஸ்லிம்கள் திரண்டு பேரணியாக சென்றனர்.

Update: 2020-02-19 22:30 GMT
மதுரை,

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மதுரையிலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன.

தடியடி சம்பவத்தை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மதுரை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், அமைப்புகள் இணைந்து மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்து இருந்தன.

அதன்படி நேற்று ஜமாத்துல் உலமா சபையின் மதுரை மாவட்ட தலைவர் சாகுல் அமீது தலைமையில் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் உலக தமிழ்ச்சங்கம் அருகே திரண்டனர்.

பின்னர் அவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், அதற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும், சென்னை தடியடி சம்பவத்தை கண்டித்தும் கோஷம் எழுப்பினார்கள். இதையொட்டி அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் தடுப்பு வேலி அமைத்து இருந்தனர்.

அதையும் மீறி கலெக்டர் அலுவலகம் நோக்கி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் காந்தி மியூசியம் முன்பு தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் போலீசார், இந்த பகுதியை தாண்டி கலெக்டர் அலுவலகம் நோக்கி செல்ல அனுமதியில்லை என்றும், மீறி செல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தனர். அதை தொடர்ந்து அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து ஜமாத்துல் உலமா சபையின் நிர்வாகிகளிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்று அவர்கள் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தனர். ஆனால் ஒரு சிலர் மட்டும் கலெக்டர் அலுவலகம் நோக்கி செல்ல முயன்றதால் அங்கு லேசான தள்ளுமுள்ளு உருவானது. பின்னர் அவர்களும் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்