குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு முஸ்லிம்கள் சாலை மறியல்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முஸ்லிம்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-02-20 00:15 GMT
சேலம்,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை திரும்ப பெறக்கோரியும் நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி, சேலம் கோட்டை பால் தெருவில் முஸ்லிம் பெண்கள் கடந்த 17-ந் தேதி முதல் தொடர் முழக்க போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர் களுடைய போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது.

இந்தநிலையில் சேலம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைமையில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகள் சார்பில் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

போலீசார் குவிப்பு

இந்த போராட்டத்தையொட்டி சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், துணை கமிஷனர்கள் தங்கதுரை, செந்தில் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். கலெக்டர் அலுவலகத்துக்குள் போராட்டக்காரர்கள் யாரும் செல்லாதபடி அங்கு தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் அங்கு கலவரம் ஏற்பட்டால் அதை தடுக்கும் வகையில் வஜ்ரா, தீயணைப்பு வாகனங்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. போராட்டம் நடைபெறும் இடத்தை முழுவதையும் கண்காணிக்கும் வகையில் கேமரா வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தது.

ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

இந்த நிலையில் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க., காங்கிரஸ், த.மு.மு.க., மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் என ஆயிரக்கணக்கானோர் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே திரண்டனர். அதைதொடர்ந்து பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜமாஅத்துல் உலமா சபை மாவட்ட தலைவர் அப்துல் சலாம் தலைமை தாங்கினார். இதில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் உள்பட பலர் பேசினர். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

சாலை மறியல்

இதையடுத்து அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் மத்திய அரசை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.

இதையடுத்து அவர்களிடம் உயர் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலினால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்