சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்: என்ஜினீயருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை கோர்ட்டு தீர்ப்பு

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த என்ஜினீயருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிரு‌‌ஷ்ணகிரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2020-02-19 23:30 GMT
கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மல்லசந்திரம் கிராமத்தை சேர்ந்த சென்னலப்பா என்பவரின் மகன் நாகராஜ் (வயது 23). என்ஜினீயர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ந் தேதி அதே ஊரை சேர்ந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ந் தேதி சிறுமி மீட்கப்பட்டார்.

போலீசாரின் விசாரணையில் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற நாகராஜ் அவரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இது குறித்து அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்தார்.

10 ஆண்டு சிறை தண்டனை

இந்த வழக்கு விசாரணை கிரு‌‌ஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் குற்றவாளி நாகராஜிக்கு, சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 5 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டு சிறைதண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜரானார்.

மேலும் செய்திகள்