பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மற்ற மாணவர்களோடு ஒப்பிடுவதை தவிர்க்க வேண்டும்; கலெக்டர் அறிவுரை

பெற்றோர் தங்கள் பிள்ளைகளை மற்ற மாணவர்களோடு ஒப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-02-20 22:15 GMT
புதுக்கோட்டை, 

பொதுவாக தேர்வு மற்றும் நேர்காணல் போன்ற மதிப்பீட்டு சோதனையை எதிர்நோக்கி இருக்கும்போது சிறி தளவு மன உளைச்சல், மனப் பதற்றம் உண்டாவது இயல்பாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, தேர்வு சார்ந்த மனப்பதற்றம் என்பது பொதுவானது. பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள், வெவ்வேறு அளவிலான சிந்தனைத்திறன், ஞாபகசக்தி, கற்பனைத்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். பெற்றோர்களும், ஆசிரியர்களும் இதனை உணர்ந்து கொண்டு, ஒவ்வொரு மாணவர்களையும் அணுகினால் மாணவர்களின் தேர்வுகால பதற்றத்தை குறைக்க முடியும்.

மனப்பதற்றமின்றி தேர்வை எதிர்கொள்ள மாணவர்கள் கீழ்கண்ட ஆலோசனைகளை கடைபிடிக்க வேண்டும். உறக்கம் ஞாபக சக்தியை திடப் படுத்தும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை. குழந்தைகள் தினமும் குறைந்தது 8 மணி நேரம் இரவில் உறங்க வேண்டும். தேவையான அளவு நன்றாக உறங்கினால் தான் தேர்வுக்கு சிறப்பாக தயாராக முடியும். தேர்வையும் சிறப்பாக எழுத முடியும்.

தினமும் போதிய அளவு நீர் ஆகாரம் எடுத்து கொள்ள வேண்டும். தண்ணீர், இளநீர், பழச்சாறு, நீர்மோர் போன்றவற்றை உட்கொள்ளலாம். வீட்டில் சமைத்த உணவை போதிய அளவு சாப்பிட வேண்டும். இது மன அழுத்தத்தை, பதற்றத்தை குறைக்க உதவும். வீட்டிலேயே கை, கால்களை நீட்டி மடக்குதல், விரல்களை மடித்து நீட்டுதல், தினமும் குறைந்தது 15 நிமிட நடை பயிற்சி, நிதானமாக மூச்சை உள்ளிழுத்து மெதுவாக வெளியிடுதல் போன்ற பயிற்சிகள் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மற்ற மாணவர்களோடு ஒப்பு நோக்குவதை தவிர்க்க வேண்டும். பிறருடன் ஒப்பு நோக்குவது குழந்தைகளின் பதற்றத்தை அதிகரிக்கும். அறிவை வளர்த்து கொள்வதும், வாழ்வை மேம்படுத்துவதுமே கல்வியின் நோக்கமாகும். தேர்வு என்பது கல்வி கற்றலின் ஒரு பகுதி என்பதை பெற்றோர்கள் உணர்ந்து செயல்பட்டால் மாணவர்களின் மனப்பதற்றத்தை எளிதாக குறைக்க முடியும். அளவு கடந்த மன பதற்றம், தூக்கமின்மை போன்றவற்றால் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளானால் புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாவட்ட மனநல ஆலோசனை மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்