குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி போராட்டம் நடத்திய 2,653 பேர் மீது வழக்கு

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி திருச்சியில் போராட்டம் நடத்திய 2,653 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2020-02-20 23:30 GMT
திருச்சி,

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் முஸ்லிம் அமைப்புகள் மற்றும் பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஜமாத்துல் உலமா சபை சார்பில் நேற்று முன்தினம் திருச்சி கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு தலைமை தாங்கிய ஜமாத்துல் உலமா சபை தலைவர் மவுலானா முக்திமுகமது மற்றும் பல்வேறு கட்சி, அமைப்புகளின் நிர்வாகிகள் 16 பேர் உள்பட 2,500 பேர் மீது செசன்ஸ் கோர்ட்டு போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி தென்னூர் உழவர்சந்தை மைதானத்தில் கடந்த 4 நாட்களாக முஸ்லிம் இளைஞர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்றும் 4-வது நாளாக அவர்களுடைய போராட்டம் நீடித்தது. இதில் முஸ்லிம் பெண்கள் பலரும் பங்கேற்றனர். இந்தநிலையில் போலீசாரின் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக பஷீர், உமர்பாரூக், இ்ம்ரான், த.மு.மு.க. பொதுச்செயலாளர் ஹைதர்அலி, தமிழக வாழ்வுரிமை கட்சி பெரியார் சரவணன் உள்பட 100 பேர் மீது தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

2,653 பேர் மீது வழக்கு

இதேபோல் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திருச்சி ஜமால்முகமது கல்லூரி அருகே மாணவர்கள் ஹபீப்முகமது, ரியாசுதீன், தர்வேஸ் உள்பட ஏராளமான மாணவர்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக மாணவர்கள் 53 பேர் மீது கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருச்சியில் நேற்று ஒரேநாளில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் உள்பட 2,653 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மேலும் செய்திகள்