மாவட்டத்தில், நடப்பாண்டில் 17 ஆயிரம் ஏக்கரில் மரவள்ளி கிழங்கு சாகுபடி முத்தரப்பு கூட்டத்தில் கலெக்டர் தகவல்

சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் 17 ஆயிரம் ஏக்கரில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக முத்தரப்புஆலோசனைகூட்டத்தில் கலெக்டர் ராமன் தெரிவித்தார்.

Update: 2020-02-20 23:30 GMT
சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மரவள்ளி கிழங்கு விலை மற்றும் விற்பனை நிலை குறித்த முத்தரப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மரவள்ளி கிழங்கு விவசாயிகள், சேகோசர்வ் ஆலை உரிமையாளர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் ராமன் பேசியதாவது:-

சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் 17 ஆயிரம் ஏக்கரில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக இங்கு விவாதிக்கப்பட்டது.

மேலும் ஸ்டார்ச் புள்ளி அடிப்படையில் மரவள்ளி கிழங்கு விவசாயிகளுக்கு விலை கொடுக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. சேகோசர்வ் ஆலைகளில் மக்காச்சோள மாவு கலப்படத்தை தடுப்பதற்காக கடந்த ஓராண்டாக ஆலைகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இடைத்தரகர்கள்

மரவள்ளி கிழங்குக்கு உரிய விலை கிடைக்க சேகோசர்வ் ஆலை உரிமையாளர்கள் மற்றும் மரவள்ளி கிழங்கு விவசாயிகள் ஒருங்கிணைந்து செயல்பட மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும். சரியான விலை கிடைக்க மரவள்ளி கிழங்கு விவசாயிகள் இடைதரகர்கள் இல்லாமல் நேரடியாக ஆலைகளை அணுக வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜேந்திரபிரசாத், வேளாண்மை இணை இயக்குனர் பன்னீர்செல்வம், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கணேசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) செல்லதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்