தேர்தல் பிரமாண பத்திரத்தில் கிரிமினல் வழக்குகளை மறைத்த வழக்கு முன்னாள் முதல்-மந்திரி பட்னாவிஸ் கோர்ட்டில் ஆஜர் ஜாமீன் வழங்கி உத்தரவு

தேர்தல் பிரமாண பத்திரத்தில் கிரிமினல் வழக்குகளை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கோர்ட்டில் ஆஜரானார். அவருக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Update: 2020-02-20 22:43 GMT
நாக்பூர், 

மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். பின்னர் அவர் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

சட்டசபை தேர்தலின்போது அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தன் மீது 1996 மற்றும் 1998-ம் ஆண்டுகளில் தொடரப்பட்ட 2 கிரிமினல் வழக்குகளை மறைத்துவிட்டதாக வக்கீல் சதீஷ் உகே என்பவர் நாக்பூர் பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றது. அப்போது வழக்கை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சந்திக்க வேண்டும் என்று தேவேந்திர பட்னாவிசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

நேரில் ஆஜர்

இதையடுத்து நாக்பூர் பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தேவேந்திர பட்னாவிஸ் மீது கடந்த ஆண்டு மீண்டும் விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் ஏற்கனவே 4 முறை ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்திருந்த நிலையில், இந்த முறை கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று தேவேந்திர பட்னாவிசுக்கு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டிருந்தார்.

இதை எதிர்த்து தேவேந்திர பட்னாவிஸ் மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து தேவேந்திர பட்னாவிஸ் நேற்று மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேரில் ஆஜரானார். அப்போது வழக்கை விசாரித்த கோர்ட்டு தேவேந்திர பட்னாவிசுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அவர் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம் ஏதும் செய்யவில்லை என்பதாலும், அவர் தலைமறைவாக வாய்ப்பில்லை என்பதாலும் ரூ.15 ஆயிரம் பிணையுடன் ஜாமீன் வழங்குவதாக மாஜிஸ்திரேட்டு பி.எஸ்.இங்லே தெரிவித்தார்.இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மார்ச் 30-ம் தேதிக்கு மாஜிஸ்திரேட்டு ஒத்திவைத்தார்.

பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த தேவேந்திர பட்னாவிஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அரசியல் உள்நோக்கம்

தேர்தல் பிரமாண பத்திரம் எனது வக்கீலால் தாக்கல் செய்யப்பட்டது. அதுமட்டும் இன்றி என் மீதான 2 வழக்குகளும் மக்கள் போராட்டத்தின் போது தாக்கல் செய்யப்பட்டது ஆகும். தனிப்பட்ட முறையில் என்மீது தொடரப்பட்டது அல்ல. இந்த வழக்குகள் குறித்து பிரமாண பத்திரத்தில் குறிப்பிடாததற்கு எந்த உள்நோக்கமும் இல்லை. தனக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை கோருவது அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள் உள்ளிட்ட உண்மையை மறைத்தால் 6 மாத சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க மக்கள் பிரநிதித்துவ சட்டத்தில் இடமிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்