கடலூரில், உதவி பேராசிரியர் காரில் இருந்த ரூ.1½ லட்சம் நகை, பணம் திருட்டு - போலீசார் விசாரணை

கடலூரில் உதவி பேராசிரியர் காரில் இருந்த ரூ.1½ லட்சம் நகை, பணத்தை திருடிச்சென்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-02-20 22:30 GMT
கடலூர், 

கடலூர் அருகே உள்ள திருமாணிக்குழி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகன் ஆனந்தன் (வயது 41). இவர் கும்பகோணம் அரசு கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் காரில் வந்திருந்தார். பின்னர் அவர் அங்குள்ள லாட்ஜ் முன்பு தனது காரை நிறுத்தி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது தனது காரில் உறவினர் ஒருவரை பாளையங்கோட்டை கிராமத்தில் விட்டு விட்டு வருமாறு டிரைவர் ராமலிங்கத்திடம் கூறினார். அவரும் அவருடைய உறவினரை அழைத்து சென்று விட்டு திரும்பி வந்தார். பின்னர் ஆனந்தனிடம் காரின் பின்புறம் நகை, பணம் உள்ளதாக கூறி விட்டு, சாவியை அவரிடம் கொடுத்து விட்டு சென்று விட்டார்.

மறுநாள் ஆனந்தன் காரின் பின்பக்கத்தை திறந்து பார்த்தார். அதில் ஒரு பெட்டியில் 13 பவுன் நகை மட்டும் இருந்தது. மற்றொரு பெட்டியில் இருந்த 4 பவுன் நகை, ரூ.40 ஆயிரத்தை காணவில்லை. அதனை யாரோ திருடிச்சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும். இது பற்றி ஆனந்தன் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்