சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கு மத்திய அரசின் உதவித்தொகை; கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுகாதாரமற்ற தொழில் புரிவோர், துப்புரவு பணி செய்வோர், குப்பை அள்ளுபவர், தோல் பதனிடும் தொழில் புரிவோர் மற்றும் கழிவுபொருள் சேகரிப்போர்களின் குழந்தைகளுக்கு மத்திய அரசின் மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

Update: 2020-02-21 21:30 GMT
திருவண்ணாமலை, 

வெளி மாணவர்களான வீட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் பராமரிப்பு படியாக 1–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரை மாதம் ரூ.225, சிறப்பு மானியமாக ரூ.750 வழங்கப்படுகிறது. அதேபோல் விடுதியில் 3–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரை தங்கி படிப்பவர்களுக்கு மாதம் ரூ.700, சிறப்பு மானியமாக ஆண்டிற்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது.

இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தூய்மை பணி மற்றும் சுகாதாரமற்ற பணிகளில் பணிபுரிபவர்களின் பள்ளியில் பயிலும் குழந்தைகளாக இருக்க வேண்டும். சாதி மற்றும் மதம் தடையில்லை. வருமான உச்சவரம்பு இல்லை. இந்த தகுதி உடையோர் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் இக்கல்வி உதவித்தொகைக்கான படிவத்தினை பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

மனுதாரர்கள் அப்பணியில் ஈடுபட்டு உள்ளதை கிராம நிர்வாக அலுவலர் அல்லது தலைமை ஆசிரியரிடம் சான்றிதழ் வாங்கினால் போதுமானது.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்