திண்டிவனத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது

திண்டிவனத்தில் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டது.

Update: 2020-02-21 22:15 GMT
திண்டிவனம், 

திண்டிவனம் நகராட்சி பகுதியான மேம்பாலத்தின் கீழ் பகுதி, மரக்காணம் ரோடு, மயிலம் ரோடு, சென்னை சாலை, புதுச்சேரி சாலை, திண்டிவனம் இந்திரா காந்தி பஸ் நிலையம்,நேரு வீதி, காமாட்சி அம்மன் கோவில் வீதி, செஞ்சிரோடு ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் இருந்தன.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்துகளும் அதிகளவில் நடந்து வந்தன. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்த நகராட்சி நிர்வாகம், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பும் செய்தது. அதில் ஒரு வாரத்துக்குள் ஆக்கிரமிப்பாளர்கள் தங்களது ஆக்கிரமிப்புகளை தாமாகவே முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும், இல்லையெனில் நகராட்சி நிர்வாகம் மூலம் அதிரடியாக அகற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ஒருசிலர் மட்டுமே ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

இந்த நிலையில், நேற்று காலை மேம்பாலம் கீழ் பகுதி, மரக்காணம் ரோடு என்று நகரின் அனைத்து முக்கிய சாலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை நகராட்சி நிர்வாகம் அதிரடியாக மேற்கொண்டது. இதில், சாலை மற்றும் அரசு இடங்களில் ஆக்கிரமித்திருந்த கடைகளின் சுவர்களை பொக்லைன் எந்திரங்களை கொண்டு இடித்து அகற்றினர். இந்த நிலையில் அதிகாரிகளின் நடவடிக்கையை பார்த்த கடை உரிமையாளர்கள் பலர், அவசர கதியில் தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அதிகாரிகள், எந்த பகுதியையும் விட்டு வைக்காமல், ஆக்கிரமித்து இருந்த கடைகளின் சுவர், மேற்கூரைகள் என்று அனைத்தையும் இடித்து அகற்றினர். சில இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

நெடுஞ்சாலைத்துறை விழுப்புரம் மண்டல திட்ட இயக்குனர் சிவாஜி, பொறியாளர் நாகராஜ், அலுவலர் கார்த்திகேயன், திண்டிவனம் தாசில்தார் ராஜசேகர், மண்டல துணை வட்டாட்சியர்கள் வேலு, முருகன், வருவாய் ஆய்வாளர் சித்தார்த், நகராட்சி துப்புரவு அலுவலர் லிப்டன் சேகர், நகரமைப்பு ஆய்வாளர் கோகுலகிரு‌‌ஷ்ணன், மின்சாரத் துறை உதவி செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வம், உதவி மின் பொறியாளர் பாஸ்கரன் உள்பட பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் இப்பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது பிரச்சினைகள் ஏதேனும் நிகழாமல் தடுக்கும் வகையில், இன்ஸ்பெக்டர்கள் திண்டிவனம் சீனிபாபு, ரோசணை காமராஜ் ஆகியோர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், தமிழ்மணி மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த பணியின் காரணமாக திண்டிவனம் நகர பகுதி நேற்று பரபரப்புடன் காணப்பட்டது.

மேலும் செய்திகள்