டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கு: ராமேசுவரத்தில் புரோக்கர் ஜெயக்குமார் அடையாளம் காட்டிய இடங்கள் கேமராவில் பதிவு - மேலூரில் வைத்தும் விசாரணை

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கில் புரோக்கர் ஜெயக்குமார் உள்பட 2 பேர் ராமேசுவரத்தில் அடையாளம் காட்டிய இடங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கேமராவில் பதிவு செய்தனர்.

Update: 2020-02-21 22:30 GMT
ராமேசுவரம்,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2ஏ, கிராம நிர்வாக அலுவலர்கள் தேர்வு முறைகேடு வழக்கில் இது வரை 46 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் குரூப்-2ஏ தேர்வு முறைகேடு வழக்கு தொடாபாக இடைத்தரகர் ஜெயக்குமார், டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் ஓம்காந்தன் ஆகிய 2 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் விசாரணைக்காக காவலில் எடுத்த ஓம்காந்தன், ஜெயக்குமார் ஆகிய 2 பேரையும் சென்னையில் இருந்து சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு சிவானுபாண்டியன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று ராமேசுவரம் அழைத்து வந்தனர்.

ராமேசுவரம் பஸ்நிலையம் அருகே ஆஞ்சநேயர் கோவில் எதிரே சாலை ஓரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வாகனங்களை நிறுத்தவே ஓம்காந்தன், ஜெயக்குமார் ஆகிய 2 பேரும் தகரத்தால் மறைக்கப்பட்டிருந்த பெரியமரம் உள்ள இடத்தை போலீசாரிடம் அடையாளம் காண்பித்தனர்.

அந்த இடத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கேமராவில் பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து தங்கச்சிமடம் பகுதியில் உள்ள தேர்வு நடந்த மையம் செல்லும் பாதையையும் பார்வையிட்டு அந்த இடத்தையும் கேமரா மூலம் பதிவு செய்து கொண்டனர்.

தொடர்ந்து ராமேசுவரத்தில் இடைத்தரகர் ஜெயக்குமார் தங்கியிருந்த தனியார் தங்கும் விடுதியையும் சென்று பார்வையிட்டு அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஜெயக்குமாரும், ஓம் காந்தனும் முகத்தை மூடியபடியே இருந்தனர்.

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடர்பாக அவர்கள் 2 பேரையும் ராமேசுவரத்திற்கு நேரில் அழைத்து வந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோல் மதுரை மாவட்டம், மேலூர் அருகே புறநகர் சாலையில் வைத்து 2-வது முறையாக சி.பி.சி.ஐ.டி போலீசார் நேற்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். துணை சூப்பிரண்டு சிவானுபாண்டியன் தலைமையிலான போலீசார் 4 வழிச்சாலையில் வைத்து சில மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலூர் கிராம நிர்வாக அலுவலர் தாமோதரன், கிராம உதவியாளர் பதினெட்டான் ஆகியோர் முன்னிலையில் இந்த விசாரணை நடைபெற்றது.

இதில் ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்னைக்கு அரசு வாகனத்தில் ஏற்றிச்செல்லப்பட்ட குரூப்-4 விடைத் தாள்களை மேலூர் சாலையில் உள்ள உணவகத்தில் உணவருந்தச் சென்ற போது மாற்றியுள்ளனர். விடைத்தாள்கள் எப்படி மாற்றப்பட்டது என்பது குறித்து துருதுத்ருவி அவர்களிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் அவர்கள் போலீசாரிடம் நடித்தும் காட்டினர்.

மேலும் செய்திகள்