ஏரி, குளங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

ஏரி, குளங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2020-02-21 22:30 GMT
சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் இருந்து பல விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் மாலை நேரத்திலும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்களில் பல ஊர்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை இருப்பதில்லை. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டுறவு சங்கங்களில் தங்க நகைகளுக்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்து கடன் வாங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் ஏரி, குளம், குட்டைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை விரைவில் அகற்ற வேண்டும். கிராம சபை கூட்டம் முறையாக நடத்த வேண்டும்.

மேட்டூர் உபரிநீர் திட்டத்திற்காக பழைய ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன் வழியாக நிறைவேற்ற வேண்டும். குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.

இதற்கு பதில் அளித்து கலெக்டர் ராமன் பேசும் போது, ‘விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

மேலும் செய்திகள்