வேறு பள்ளியில் சேர மாற்று சான்றிதழ் வழங்கியதால் ஆத்திரம் ஆசிரியரின் கையை முறித்த 2 மாணவர்கள் கைது

வேறு பள்ளியில் சேர மாற்று சான்றிதழ் வழங்கிய ஆத்திரத்தில் ஆசிரியரின் கையை முறித்த 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-02-21 23:00 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் செல்வராஜ் (வயது 40). இவர் ஏத்தாப்பூர் பகுதியில் வசித்து வருகிறார். தினமும் பஸ்சில் பள்ளிக்கூடத்துக்கு சென்று வருவார். இந்த நிலையில் இவர் பணியாற்றும் பள்ளியில் 17 வயதுடைய ஒரு மாணவர் பிளஸ்-2 படித்து வந்தார். நிர்வாக நலன் கருதி அந்த மாணவருக்கு வேறு பள்ளியில் சேர மாற்று சான்றிதழ் (டி.சி.) வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு ஆசிரியர் செல்வராஜ் தான் காரணம் என்று அந்த மாணவர் நினைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆசிரியர் செல்வராஜ், ஏத்தாப்பூரில் பஸ்சை விட்டு கீழே இறங்கினார். அப்போது அந்த மாணவர், தனது உறவினரான பிளஸ்-1 படிக்கும் மற்றொரு மாணவருடன் சென்று ஆசிரியரை வழிமறித்தார்.

‘உங்களால்தான் பள்ளியில் இருந்து மாற்று சான்றிதழ் எனக்கு வழங்கினார்கள்’ என்று கூறி ஆசிரியரை தகாத வார்த்தையால் திட்டி, 2 பேரும் சேர்ந்து அவரை தாக்கி உள்ளனர். மேலும் ஆசிரியரின் கையை முறித்துள்ளனர். இதில் காயம் அடைந்த ஆசிரியர் செல்வராஜ் ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்த புகாரின் பேரில் ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் மாணவர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஆசிரியர் செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியரை மாணவர்கள் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்