ஓசூரில் பரபரப்பு: வங்கி முகவரை, ரூ.10 லட்சம் கேட்டு கடத்தி கொல்ல முயற்சி ரவுடி உள்பட 4 பேருக்கு வலைவீச்சு

ஓசூரில் ரூ.10 லட்சம் கேட்டு வங்கி முகவரை காரில் கடத்தி சென்று கொலை செய்ய முயன்ற பிரபல ரவுடி உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2020-02-21 21:24 GMT
மத்திகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்திகிரி டைட்டான் டவுன்சிப் ஜெ.பி.டிராங்கிள் லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் வினோத் (வயது 35). இவர் வங்கியில் லோன் முகவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இவர் தனது காரில் பெட்ரோல் நிரப்புவதற்காக மத்திகிரி கூட்டு ரோடு அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் வந்தார்.

அப்போது ஓசூர் தேர்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி ராதா என்கிற ராதாகிரு‌‌ஷ்ணன் மற்றும் 3 பேர் மற்றொரு காரில் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென வினோத்தை தாக்கி தாங்கள் வந்த காரில் கடத்தி சென்றனர்.

ஓசூரில் பாகலூர் சாலையில் கே.சி.சி. நகர் எதிரில் உள்ள ஒரு பகுதிக்கு கொண்டு சென்ற அவர்கள், வினோத்திடம் ரூ.10 லட்சம் கேட்டனர். பணத்தை தந்தால் விட்டு விடுவோம். இல்லாவிட்டால் கொன்று விடுவோம் என்றும் மிரட்டினார்கள். அதற்கு வினோத் தன்னிடம் பணம் எதுவும் இல்லை என்று கூறினார்.

இதையடுத்து ராதாகிரு‌‌ஷ்ணனுடன் வந்த கும்பல், வினோத்தின் செல்போனை பறித்து அவரது செல்போன் மூலமாக வங்கி கணக்கில் ஏதேனும் பண பரிவர்த்தனை நடந்துள்ளதா என்றும், அவரது வங்கி கணக்கில் பணம் உள்ளதா? என்றும் சோதனை செய்து பார்த்தனர். அதில் பணம் இல்லாததால் ஆத்திரம் அடைந்த கும்பல் வினோத்தை தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் தாக்கி கொல்ல முயன்றனர்.

இதில் வினோத்திற்கு சரமாரியாக வெட்டு காயங்கள் ஏற்பட்டது. மேலும் வினோத் அந்த கும்பலிடம் இருந்து தப்பி வந்தார். இது குறித்து அவர் மத்திகிரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிரு‌‌ஷ்ணன் விசாரித்து கடத்தல், கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராதாகிரு‌‌ஷ்ணன், அவரது கூட்டாளிகளை தேடி வருகிறார்கள்.

தற்போது ராதாகிரு‌‌ஷ்ணன் கூட்டாளிகள் வந்த கார் கெலமங்கலம் சாலையில் பறிமுதல் செய்யப்பட்டது. ஓசூர் தேர்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி ராதாகிரு‌‌ஷ்ணன் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஓசூர் ரெயில் நிலையத்தில் நடைபயிற்சி சென்ற தொழில் அதிபர் ஜான்பா‌ஷா, அவரது நண்பர் மன்சூர் ஆகியோரை கத்தி முனையில் கடத்தினார். ஜான்பா‌ஷாவிடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய ராதாகிரு‌‌ஷ்ணனை போலீஸ் நெருங்கியதால் ஜான்பா‌ஷா, மன்சூர் ஆகியோரை கத்தியால் குத்தினார்.

இதில் ஜான்பா‌ஷா இறந்தார். மன்சூர் உயிர் பிழைத்தார். இந்த கொலையில் ராதாகிரு‌‌ஷ்ணன் உள்பட 8-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அதே ஆண்டில் கோவில்பட்டி அருகே நடந்த மற்றொரு கொலை வழக்கிலும் ராதாகிரு‌‌ஷ்ணனுக்கு தொடர்பு உள்ளது.

ஓசூரில் பிரபல ரவுடிகள் பட்டியலில் ஏற்கனவே கொற கோபி, கஜா உள்ளிட்டோர் உள்ளனர். ராதாகிரு‌‌ஷ்ணன் பெயரும் ரவுடிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவரது நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் தான் தற்போது ராதாகிரு‌‌ஷ்ணன் மீண்டும் பணத்திற்காக ஆள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்