கொள்ளிடம்-பனங்காட்டாங்குடி இடையே கரடு, முரடான சாலை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கொள்ளிடம்-பனங்காட்டாங்குடி இடையே கரடு, முரடான சாலை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2020-02-21 22:56 GMT
கொள்ளிடம்,

நாகை மாவட்டம், கொள்ளிடம் சோதனை சாவடியில் இருந்து பனங்காட்டாங்குடி கிராமம் வரை கொள்ளிடம் ஆற்றின் வலதுகரை சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக குத்தவக்கரை, சரஸ்வதிவிளாகம், கொன்னக்காட்டுப்படுகை, கீரங்குடி, மாதிரவேளூர், படுகை, பட்டியமேடு, அகரஎலத்தூர், வடரெங்கம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர்.

இந்த சாலை மேம்படுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் கருங்கல் ஜல்லிகள் பெயர்ந்து மேற்கண்ட சாலை கரடு, முரடாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் பழுதாகி பாதியில் நின்று விடுகிறது.

மேலும் சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவிகள் இடறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். சாலை சேதமடைந்து இருப்பதால் உரியநேரத்தில் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்த பகுதி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் தற்போதுவரை சாலையை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

எனவே, கொள்ளிடம்- பனங்காட்டாங்குடி இடையே கரடு, முரடான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்