ஜெயலலிதா பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு

ஜெயலலிதாவின் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Update: 2020-02-22 00:08 GMT
புதுச்சேரி,

ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவினை கொண்டாடுவது தொடர்பாக அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உப்பளத்தில் உள்ள தலைமை கழகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இளைஞர் அணி செயலாளர் பாஸ்கர் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் துணை செயலாளர்கள் பெரியசாமி, கணேசன், பன்னீர்செல்வி, ராஜாராமன், மீனவர் அணி செயலாளர் ஞானவேல், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாப்புசாமி, உழவர்கரை நகர செயலாளர் அன்பானந்தம், நிர்வாகிகள் பரசுராமன், மோகன்தாஸ், அன்பழக உடையார், நாராயணன், சிவக்குமார், கலியபெருமாள், பொன்னுசாமி, ஜானிபாய், சக்கரவர்த்தி, திருபுவனை காந்தி உள்பட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
ஜெயலலிதாவின் பிறந்தநாளான வருகிற 24-ந்தேதி புதுவை மாநில தலைமை கழகத்தில் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு தட்டுவண்டி, ஆதரவற்ற பெண்களுக்கு கிரைண்டர், தையல் எந்திரம், ஏழை மக்களுக்கு இலவச வேட்டி-சேலை வழங்குவது. ஜெயலலிதாவின் பிறந்தநாளை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாக அறிவித்து ஆதரவற்ற பெண் குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றும் பல நலத்திட்டங்களை அறிவித்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவிப்பது.

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மாவட்டங்களாக அறிவித்து அதற்கு சட்டரீதியாக வடிவம் அமைக்க அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று, அதற்காக குழு அமைத்து துரித நடவடிக்கை எடுத்து வரும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிப்பது.

ஜெயலலிதாவின் பிறந்தநாளில் புதுவை ராஜீவ்காந்தி மகப்பேறு பொது மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச தங்க மோதிரம் அணிவிப்பது.

தி.மு.க. துணையோடு ஆட்சி அமைத்து 46 மாதமாகியும் அறிவித்த எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தாமல் மலிவு விளம்பரத்துக்கு மத்திய அரசிடம் மோதல் போக்கை கடைபிடித்து, மாநில வளர்ச்சியை பின்னுக்கு தள்ளிய புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமியை கண்டிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்