களக்காட்டில் டிராக்டர் டிரைவருக்கு கத்திக்குத்து கணவன், மனைவி உள்பட 4 பேருக்கு வலைவீச்சு

களக்காட்டில் டிராக்டர் டிரைவரை கத்தியால் குத்திய கணவன், மனைவி உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-02-22 21:30 GMT
களக்காடு, 

களக்காட்டில் டிராக்டர் டிரைவரை கத்தியால் குத்திய கணவன், மனைவி உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

டிராக்டர் டிரைவர் 

நெல்லை மாவட்டம் களக்காடு கக்கன் நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 49). டிராக்டர் டிரைவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பாக்கியநாதனுக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஜெயக்குமார், மூங்கிலடியை சேர்ந்த சுமன் என்பவருக்கு சொந்தமான நெல் மூட்டைகளை தனது டிராக்டரில் ஏற்றிக்கொண்டு, களக்காட்டில் உள்ள எடை மேடைக்கு நெல்லை எடை போடுவதற்காக சென்றார். அவருடன் பாக்கியநாதனின் அண்ணன் மாசிலாமணியும் சென்றார்.

நெல் எடைபோட்ட ரசீதை மாசிலாமணி வாங்கி சென்றார். இதற்கிடையே சுமன், ஜெயக்குமாரிடம் ரசீதை கேட்டார். அதற்கு ஜெயக்குமார் ரசீதை மாசிலாமணி வாங்கி சென்றுவிட்டார் என்று கூறினார். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த பாக்கியநாதன் என் அண்ணனை பற்றி ஏன் பேசுகிறாய் என்று கேட்டு, ஜெயக்குமாரை தாக்கியதாக தெரிகிறது. இதனை ஜெயக்குமாரின் மகள் மதனா தட்டி கேட்டாராம்.

கத்திக்குத்து 

இதில் ஆத்திரமடைந்த பாக்கியநாதன், அவருடைய மனைவி முனியம்மா, மகன் அருள்தாஸ், மகள் பாப்பாத்தி ஆகியோர் சேர்ந்து ஜெயக்குமாரை கம்பால் தாக்கி, கத்தியால் குத்தினர். இதில் பலத்த காயமடைந்த ஜெயக்குமார் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, பாக்கியநாதன் உள்பட 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்