பூந்தமல்லி அருகே பெட்ரோல் நிலையத்தில் லாரியில் டீசல் நிரப்பும்போது திடீர் தீ விபத்து டிரைவர் உடலில் தீப்பிடித்ததால் பரபரப்பு

பூந்தமல்லி அருகே பெட்ரோல் நிலையத்தில் கன்டெய்னர் லாரியில் டீசல் நிரப்பும்போது திடீரென தீப்பிடித்து எரிந்ததால் டிரைவர் உடலில் தீப்பிடித்தது. இதில் படுகாயம் அடைந்த அவர், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

Update: 2020-02-22 23:15 GMT
பூந்தமல்லி,

உத்தரபிரதேச மாநிலம், கேராய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் சிங்(வயது 33). தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். நேற்று காலை பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் தான் ஓட்டி வந்த கன்டெய்னர் லாரிக்கு டீசல் நிரப்புவதற்காக வந்தார்.

பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்யும் சுரேஷ் என்பவர் கன்டெய்னர் லாரியில் டீசலை நிரப்புவதற்காக பைப்பை போட்டுவிட்டு அதை பிடிக்கும்படி டிரைவர் ராஜேஷ்குமார் சிங்கிடம் கொடுத்துவிட்டு பில் போடுவதற்காக சிறிதுதூரம் தள்ளி நின்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக டீசல் டேங்கில் இருந்து குபீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெட்ரோல் நிலைய ஊழியர்கள் அலறி அடித்து ஓடினர். டிரைவர் ராஜேஷ்குமார் சிங்கின் உடலில் தீப்பிடித்தது.

உடலில் எரியும் தீயுடன் அவர் அலறி அடித்து ஓடினார். இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது.

உடனே பெட்ரோல் நிலைய ஊழியர்கள், டிரைவரின் உடலில் எரிந்த தீயை தீ அணைக்கும் கருவி மூலம் அணைத்தனர். பின்னர் அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தீ விபத்தில் ராஜேஷ்குமார் சிங்கின் முகம், மார்பு, தொடை பகுதிகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தீயை உடனடியாக அணைத்து விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்